2026 தேர்தலில் நாம யாருன்னு காட்டுவோம்! களமிறங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி! எந்த தொகுதியில்? பா.ரஞ்சித் பரபர!

First Published | Nov 17, 2024, 3:50 PM IST

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது என கூறிவந்த நிலையில் விசாரணையில் ரவுடிகள், வழக்கறிஞர்கள் பலரது கூட்டு முயற்சியில் அரங்கேறியது விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் திமுக, அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணன், சம்பவம் செந்தில் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனர். இந்த விசாரணையின் படி காவல்துறையினரின் குற்றப்பத்திரிகையில், A1 ஆக ரவுடி நாகேந்திரனும், A2 ஆக தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கடந்த விசாரணையில் காவல்துறையினரால் தயார் செய்யப்பட்ட 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Latest Videos


இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனந்தனும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குறித்து எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்ற புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டார்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. அதை வெளியில் கொண்டுவர வேண்டிய தேவையிருக்கிறது. இரண்டு ரவுடி கும்பல்களின் மோதல்கள் என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையில்லை ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது. ஒரு கட்சியின் தலைவரை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இங்குள்ள உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாகக் கண்டித்து கேள்விகளை எழுப்புவதாகப் பலரும் கூறுகின்றனர். திமுக மற்றும் அதிமுக என எந்த அரசாக இருந்தாலும் எங்கள் உரிமைகளை, கேள்விகளை நாங்கள் பயமின்றி கேட்போம். கேள்வி கேட்பது எங்கள் ஜனநாயக கடமை. பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவருக்கு செய்யும் மரியாதை. இதற்காக அவரின் மனைவியான திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்களை திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி, அவர்களை வெற்றிபெற வைக்க நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும். தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். நாம யாருன்னு காட்டணும் என பா.ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ளார்.

click me!