ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியின் மரணம் வழக்கில் புதிய திருப்பம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்க பழியாக நடந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியானது.
24
சம்போ செந்தில் எஸ்கேப்
இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் மட்டும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
34
சிபிஐ விசாரணை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீசார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், ஆயுள் தண்டனை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் இன்று காலை உயிரிழந்தார்.