Published : Jun 05, 2026, 11:13 AM ISTUpdated : Jun 05, 2026, 01:13 PM IST
Annamalai: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக முன்னாள் தலைருமான அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக அக்கட்சியின் தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கி அதனை கட்சியாக மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
24
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேசினார். மேலும் பிரதமர் மோடியையும் அவர் சந்தித்ததாக தகவல்கள் கூறின. இந்த நிலையில், அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பாஜக தேசிய தலைமை இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகும் முடிவை ஏற்பதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருந்து ஒட்டுமொத்தமாக அதாவது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதன்மூலம் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
34
பாஜகவுக்கு பெரும் பின்னடைவு
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பிரதமர் மோடி மீது பற்று கொண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்ற அவர் தமிழகத்தில் பாஜகவை இளைஞர்களிடத்திலும், மாநிலத்தின் மூலை முடுக்கிலும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை அடுத்து எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறார்? என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், புதிய இயக்கத்தை தொடங்கி அதனை கட்சியாக மாற்ற உள்ளதாவும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அண்ணாமலை இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். ''முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் சொல்லி கொடுத்து கட்சியாக மாற்றுவேன். சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே எனது இலக்கு. நமது கட்சியில் எந்த தலைவர்களின் பதவியும் நிரந்தரம் அல்ல'' என்று அண்ணாமலை வீடியொ வெளியிட்டு கூறியுள்ளார்.