Published : May 21, 2025, 10:09 AM ISTUpdated : May 21, 2025, 10:12 AM IST
திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இந்த புதிய நிலையத்திற்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது திருச்சி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகும்.
தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களை அதி நவீன வசதியோடு மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையில் சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது திருச்சியில் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 9ஆம் தேதி திறந்து வைத்தார்.
24
சர்வதேச தரத்தில் திருச்சியில் பேருந்து முனையம்
தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரைத்தளத்தில் 124 பேருந்துகள், நீண்ட நேர நிறுத்த பேருந்துகள் 141, குறைந்த நேர நிறுத்த பேருந்துகள் 80 என 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளூர் நகரப் பேருந்துகளும், என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
34
திருச்சிக்கு வந்து செல்லும் பேருந்துகள்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் 3,448 பேருந்துகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற பல்வேறு நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதே போல தனியார் நிறுவனங்கள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு 92 நகரப் பேருந்துகளை இயக்குகின்றன.
இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் இயக்கும் வகையில் முக்கிய தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய பேருந்து நிலையம் வரை தங்கள் பேருந்துகளை இயக்க அனுமதி பெற்ற அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் IBT திருச்சியின் புதிய மத்திய பேருந்து நிலையமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.