
தமிழ்நாடு சட்டசபையில் திங்கட்கிழமை எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் தனித்தனி குழுக்களாக அமர்ந்திருந்ததால், கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல் அப்பட்டமாக வெளிப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒரு பக்கமும், மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் இன்னொரு பக்கமும் தனித்தனியாக அமர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை பட்டவர்த்தனமாக காட்டியது. வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியேற்றாலும், சிவி சண்முகம் மட்டும் பதவி ஏற்கவில்லை. இன்று காலை சட்டமன்றத்துக்கு தனியாக வந்த அவர் பாதியிலேயே கிளம்பிச் சென்றிருக்கிறார். இதனால் பதவி ஏற்க அழைத்தபோது அவர் சபையில் இல்லை.
சமீபத்தில், தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் பரபரப்பு நிலவியது. அப்போது, 28 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி, பூரணாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவர்கள் அனைவரும் அதிமுகவின் மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தவெக-வுடன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், தவெக-வுக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தது. பின்னர், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார்.
இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் சேர்ந்து மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
நேற்று, தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், "வெளிப்படையான அரசாங்கத்தை" நடத்த விரும்புவதாக விஜய் தெரிவித்திருந்தார். மேலும், "அனைத்து செயல்களையும் வெளிப்படையாகவே செய்வேன்" என்றும் குறிப்பிட்டார். முந்தைய திமுக அரசு, மாநிலத்தின் கஜானாவை காலி செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"எல்லாவற்றையும் ஆய்வு செய்த பிறகு, மக்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புகிறேன். எனது அரசு ஒரு வெளிப்படையான அரசாக இருக்க வேண்டும். அதுதான் நான் செய்ய விரும்பும் முதல் விஷயம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நான் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால், அதை ரகசியமாகவோ அல்லது மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ செய்ய மாட்டேன். நான் எதைச் செய்தாலும், அதை வெளிப்படையாகவும், ஒளிவுமறைவின்றியும் செய்வேன். எனக்கு சிறிது காலம் கொடுக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் உறுதியளித்த அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன், அவற்றைச் செயல்படுத்த உண்மையாக முயற்சிப்பேன். இது உங்கள் அரசு. பெண்களுக்கு கடுமையான பாதுகாப்பை உறுதி செய்வேன்," என்று முதல்வர் விஜய் கூறினார்.
மாநிலத்தின் 'மோசமான நிதிநிலையை' சுட்டிக்காட்டி, திமுக மீது குற்றம்சாட்டிய விஜய், "இன்று, நமது தமிழ்நாடு அரசு எந்த நிலையில் விடப்பட்டுள்ளது என்பதை நான் நேரில் பார்த்தேன். கடந்த அரசு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டுச் சென்றுள்ளது; அவர்கள் பதவியை விட்டுச் செல்வதற்கு முன் கஜானா முற்றிலும் காலி செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். நான் இதை வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை; உள்ளே சென்று நேரில் பார்த்தால்தான் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது புரியும்," என்றார்.
தவெக தலைவரான விஜய், தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பிறகு, 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்பு அதிரடிப் படைகள் அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.