பாளையங்கோட்டை தேவாலயத்தில் 170 ஆண்டுகள் பழமையான கடிகாரம் ஒன்று மீண்டும் மணியோசை ஒலிக்க காத்திருக்கிறது. பொறியியல் அதிசயமான இந்த கடிகாரம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நகரின் முக்கிய அடையாளமே கல்வி தான். அந்த அளவுக்கு இங்கு புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் நிறைந்துள்ளன.
பாளையங்கோட்டையை கல்வி நகரம் என்பது மட்டுமின்றி தேவாலயங்கள் நிறைந்த நகரம் என்று கூட சொல்லலாம். இங்கு வரலாற்று சிறப்புமிக்க ஏராளமான தேவாலயங்கள் உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருவது புனித திருத்துவ கதீட்ரல் (Holy Trinity Cathedral) பேராலயம்.
24
170 ஆண்டுகள் பழமைவாய்ந்த கடிகாரம்
1826ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த இந்த தேவாலயம் அண்மையில் தான் இருநூறாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. இந்த தேவாலயத்தில் சுமார் 170 ஆண்டுகள் பழமைவாய்ந்த கடிகாரம் ஒன்று உள்ளது.
இப்போதைய மின்சாரக் கடிகாரங்கள் போல் அல்லாமல் வெயிட் மற்றும் புல்லி சிஸ்டம் மூலம் இயக்கப்படும் இந்த கடிகாரம் வாரத்துக்கு ஒருமுறை கையால் சாவி மூலம் இயக்கப்படுகிறது. இந்த கடிகாரம் 1854ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 1855ம் ஆண்டு நிறுவப்பட்டது. லண்டனின் புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான ஜான் மூர் அண்ட் சன்ஸ் இதை உருவாக்கியுள்ளது.
34
பிக் பென்னை விட பழமையானது
பொறியியல் அதிசயமாக பார்க்கப்படும் இந்த கடிகாரம் இன்றும் ஓடிக்கொண்டிருந்தாலும் தொழில்நுட்ப கோளாறுகளால் அதன் மணியோசை ஒலிக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் இதை சரி செய்ய முடியாததால் தேவாலய நிர்வாகிகள் இதற்கு பதிலாக பேட்டரியால் இயங்கும் கடிகாரத்தை இயக்கும் யோசனைக்கு முன்வந்தனர்.
இந்த நிலையில், பழங்கால கடிகார சேகரிப்பாளர் ராபர்ட் கென்னடி மற்றும் கடிகார நிபுணர் நாகராஜ் ஆகியோர் அண்மையில் கதீட்ரல் தேவாலயத்தில் உள்ள பழங்கால கடிகாரத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது இந்த கடிகாரம் புகழ்பெற்ற லண்டனின் பிக் பென்னை (1859) விட பழமையானது என்ற வியக்கத்தக்க ஒரு உண்மையை கண்டறிந்தனர். நாட்டின் மிகவும் பழமைவாய்ந்த இந்த கடிகாரத்தை சரி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
''கடிகாரத்தின் மணி அடிக்கும் பகுதியில் தான் கோளாறு உள்ளது. இதை ஒரு வாரத்திற்குள் சரிசெய்துவிட முடியும்'' என்று கடிகார நிபுணர் நாகராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கடிகாரத்துக்கான உதிரிபாகங்கள் இப்போது சந்தையில் கிடைக்காது என்பதால் லேத் எந்திரம் மூலம் ஒவ்வொரு பாகத்தையும் செதுக்கி சரி செய்ய வேண்டும் என்று இருவரும் தெரிவித்துள்ளனர். 170 ஆண்டுகள் பழமைவாய்ந்த கடிகாரம் மீண்டும் மணியோசை எழுப்புவதை பார்க்க பாளையங்கோட்டை மக்கள் ஆவலுடன் உள்ளனர்.