ஊறுகாய்
விழுப்புரம் மாவட்டம் வழுதுரெட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள பாலமுருகன் என்ற உணவகத்தில் பார்சல் பாப்பாட்டின் விலையை விசாரித்துள்ளார். அதற்கு பதில் அளித்த உணவக நிர்வாகம், ஒரு சாப்பாட்டின் விலை ரூ.80, அதில் சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலையுடன் சேர்த்து 1 ரூபாய் ஊறுகாய் பொட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பார்சல் சாப்பாடு
இதனை ஏற்ற ஆரோக்கியசாமி ரூ.80 வீதம் 25 பார்சல் சாப்பாட்டிற்கு ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தி உணவை வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் சாப்பிடும்போது பார்க்கையில் பார்சலில் ஊறுகாய் விடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உணவகத்தை அணுகி ஊறுகாய் விடுபட்டது தொடர்பாக முறையிட்டுள்ளார்.
நுகர்வோர் நீதிமன்றம்
இது தொடர்பாக உணவக ஊழியர்களிடம் விசாரித்த உரிமையாளர், ஊறுகாய் விடுபட்டதை ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் ஊறுகாய்க்கான ரூ.25ஐ திருப்பி தருமாறு ஆரோக்கியசாமி கேட்டதற்கு உணவக உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆரோக்கியசாமி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அபராதம்
வழக்கு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, உணவில் ஊறுகாய் வைக்காமல் விட்டது வாடிக்கையாளருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனுதாரருக்கு ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம், ஊறுகாய்க்கான ரூ.25 இவற்றை 45 நாட்களுக்குள் உணவகம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு 9% வட்டியுடன் இந்த தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.