தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் இருந்த சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டிஜிபி திரிபாதியில் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இதையறிந்த ராஜேஷ் தான் அவரை வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
DGP Rajesh Das
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் எஸ்.பி.யின் காரை மறித்த அம்மாவட்ட எஸ்.பி.யாக இருந்த கண்ணன் ராஜேஷ் தாஸிடம் போனில் பேசினால் தான் சாவியை கொடுப்பேன் என்று மிரட்டினார். இதனையடுத்து, ஒருவழியாக சென்னை வந்த பெண் அதிகாரி டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும் காரை வழிமறித்த எஸ்.பி.கண்ணன் மீதும் புகார் அளித்தார்.
அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் டிஜிபி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவந்தனர். இந்த புகாரின்பேரில் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வருகிற 16ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
DGP Rajesh Das
இந்நிலையில் கடந்த 2 வருடமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது. அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல், ராஜேஷ் தாஸ் உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.