அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற நிறுவனத்தை எடுத்து நடத்தி வருகிறார். இவர் திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் திமுகவினருக்கு எதிராக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் தொலைக்காட்சியில் பெண் காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதனால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
குண்டர் சட்டத்திற்கு கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் சவுக்கு சங்கர் கோவை சிறையில் தனது கை உடைக்கப்பட்டதாகவும், எப்போதும் போல உண்மையை பேச பயப்படப் போவது இல்லை என்றார். சிறையில் இருந்து வெளியே வந்த போதிலும் தமிழக அரசை சவுக்கு சங்கர் விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை திடீரென சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.
இதனையடுத்து சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருதய பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்குப் பிறகு, நான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறேன். எனது மருத்துவர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.