
தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் விதிவிலக்குகளை தளர்வு செய்து தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்ட அரசாணையில், ''குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காகக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" என்னும் திட்டத்தினைச் செயல்படுத்திட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது.
முக்கியமான விதிவிலக்குகள்
மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைச் செயல்படுத்திடும் பொருட்டு, வெளியிடப்பட்ட மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பத்தி எண்.8.4-இல் விதிவிலக்குகள் என்ற தலைப்பின் கீழ் ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன், கூடுதலாக இரண்டு விதிவிலக்குகள் இணைக்கப்பட்டு கீழே குறிப்பிடப்பட்ட மூன்று விதிவிலக்குகளுடன் ஆணையிடப்பட்டது.
* இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள்
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் /தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர். திட்டத்தின் பிற தகுதிகளை பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர. அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள், இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
* அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து. எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளிடப்பட்டன'' என்று கூறப்பட்டுள்ளது.