சென்னையில் 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், மிகவும் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை கொன்டு சேர்ப்பதில் புறநகர் ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
24
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ரத்து
இந்நிலையில், தெற்கு ரயில்வே மே 31, ஜூன் 1 மற்றும் ஜூன் 2ம் தேதிகளில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் பொறியியல் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றங்களை செய்துள்ளது.
அதாவது காட்டங்குளத்தூர் யார்டில் உள்ள வழித்தடப் பணி காரணமாக ஜூன் 1 அன்று, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை செல்லும் 9 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
34
தாம்பரம்-கூடுவாஞ்சேரி ரயில் சேவை
இதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.05 மணி வரை செல்லும் 6 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தாம்பரம் கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை பாதிக்கப்படும்.
மேலும் மே 31 மற்றும் ஜூன் 2ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை - நெல்லூர் பிரிவில் 17 மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை கடற்கரை, ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே சேவை பாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் மே 31ம் தேதியே தங்களது சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். பேருந்துகள் மற்றும் விரைவு ரயில்களில் சென்று செங்கல்பட்டு, காட்டாங்களத்தூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து புறநகர் ரயில்களில் பயணித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வார்கள்.
ஆனால் இந்த நேரத்தில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவது சென்னை திரும்பும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.