முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? என்பதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாஜக செய்தது தவறு என்றும் தனக்கும் சுயமரியாதை உண்டு எனவும் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றார்.
24
முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கே சென்று சந்தித்த ஓபிஎஸ்
ஏற்கெனவே இன்று காலை நடைபயிற்சியின்போது முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இன்று 2வது முறையாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சென்று முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்கே சென்று ஓபிஎஸ் சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. இதனால் ஓபிஎஸ் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க போகிறாரா? இல்லை திமுகவில் சேர்ந்து புதிய பொறுப்புகளை பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஸ்டாலினை சந்தித்தது ஏன்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ்ஸின் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ''அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு. முதல்வர் ஸ்டாலினுடன் அரசியல் ஏதும் பேசவில்லை. மருத்துவமனையில் இருந்து திரும்பிய முதல்வரிடம் நலம் விசாரிக்கவே அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு'' என்று தெரிவித்தார்.
34
எனக்கும் சுயமரியாதை உண்டு
தொடர்ந்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து பேசிய அவர், ''பாஜக என்னை அவமானப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. அரசியலில் எனக்கு என்று சுயமரியாதை உள்ளது. ஜெயலலிதாவின் நேரடிப் பார்வையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளேன். ஆனால் பாஜக மீது எனக்கு வருத்தம் உள்ளது. பாஜக தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்தது வருதத்தை தருகிறது. மாநிலத்துக்கு கல்வி நிதியை வழங்காமல் இருப்பது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல'' என்று தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஓபிஎஸ், ''கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு பாஜகவில் இருந்து இதுவரை என்னிடம் யாரும் பேசவில்லை. மக்களவை தேர்தலில் இபிஎஸ் யாருடன் கூட்டணி வைத்திருந்தார்? நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுகவும், பாஜகவும் இப்போது கூட்டணி சேர்ந்துள்ளது. இபிஎஸ்க்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார்.