
ஸ்ரீவைகுண்டத்தில் 10 நபர்களைக் கொண்ட விவசாய குடும்பத்தில் 3வது குழந்தையாக 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் பிறந்தவர் நல்லகண்ணு. இவரின் அப்பா இராமசாமி மிக தீவிரமான வைணவ பக்தர். தந்தை வழியில், சைவ உணவுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948-49 களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடத் தொடங்கினார். அசைவம் அப்படித் தான் அவர் வாழ்வில் நுழைந்தது. பொதுமக்கள் சாப்பிடும் உணவே கமியூனிஸ்டுகளின் உணவு என அடிக்கடி சொல்வாராம் நல்லகண்ணு.
இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார் நல்லகண்ணு. 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம், அவரை அணைத்துக் கொண்டது. எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார். 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை காவல்துறை கைது செய்தது. அப்போது அவரது மீசையை சிகரெட்டால் பொசுக்கியும், முடியை பிய்த்தும் காவல்துறையினர் நடத்திய சித்ரவதைகளே நல்லகண்ணு மீசைய துறக்க காரணம் ஆனது.
நல்லகண்ணு உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1951 முதல் 1956 வரை சிறைவாசம் அனுபவித்தார் நல்லகண்ணு. சிறையில் இருந்தபோது அவருக்கு வாசிப்பு பழக்கம் பற்றிக் கொண்டது. தமிழ்நாட்டில் புத்தகங்கள் அதிகம் வாசிக்கும் தலைவர்களில் ஒருவர் நல்லகண்ணு. சிறையில் இருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு பெண் கொடுக்க முன்வந்தார், சாதி ஒழிப்பு போராளி அண்ணச்சாமி. 1958-ல் நல்லகண்ணுவுக்கு நெல்லையில் திருமணம் நடைபெற்றது. கட்சியின் லட்சியங்களை உணர்ந்து வளர்ந்த ரஞ்சிதம், வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, நல்லகண்ணுவுக்கு ஒரு நல்ல பிரெண்டாகவும் இருந்தார்.
2016-ம் ஆண்டு நல்லகண்ணுவின் மனைவி காலமானார். மனைவியின் மறைவு நல்லகண்ணுவுக்கு பேரிழப்பாக மாறியது. ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நாங்குநேரி கோவிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம். செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு மிக நீளமானது.
சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர் நல்லகண்ணு. குற்றாலம் அருவிக்கு அருகே ரேஸ் கோர்ஸ் அமைக்கும் முயற்சி நடந்ததை, 1985-ல் தாமரை இதழில், கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார் நல்லகண்ணு. 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க, அவரே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடி தடை வாங்கினார். பாரதி மீது பற்று கொண்டிருந்த நல்லகண்ணு, முதல் மகளுக்கு காசி பாரதி என்றும், ஒரு பேத்திக்கு பாரதி கண்ணம்மா என்றும் பெயர் சூட்டி இருந்தார்.
நல்லகண்ணு நல்ல இசை ரசிகராகவும் இருந்து வந்தார். நாதஸ்வர இசை மிகவும் பிடிக்குமாம். நலம்தானா பாடல் தான் அவரது செல்போனில் வெகு நாட்கள் ரிங் டோனாக இருந்து வந்தது. பணத்தை எப்போதுமே துட்சமாக தான் பார்ப்பார் நல்லகண்ணு. அவருடைய 80வது பிறந்தநாளுக்கு பரிசாக 1 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதை வாங்கி அந்த கட்சிக்கே திருப்பி கொடுத்துவிட்டார் நல்லகண்ணு. அதேபோல் தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து 1 லட்சம் ரூபாயும் வழங்கியது. அதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயிகளுக்கும் கொடுத்துவிட்டார்.
மொத்தம் 3 தேர்தல்களில் போட்டியிட்டு மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார் நல்லகண்ணு. 1967 மற்றும் 1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கோவையிலும் போட்டியிட்டார். எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புடன் கூடிய தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்க்கை, இளம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு காலமானாலும் அவரின் அரசியல் வரலாறு காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.