பெண்கள் எல்லா துறையிலும் கோலோச்சி வரும் நிலையில், சென்னையில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் வசதி தொடங்கப்பட்டுள்ளது. நந்தனம் மெட்ரோ ரயில்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த வாகன சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், ரேபிடோ நிறுவனமும் இந்த திட்டத்திற்காக கை கோர்த்துள்ளன.
மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த ரேபிடோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது என ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். இந்த சேவை பெண்களால் பெண்களுக்கு உறுதுணையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.