சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னையில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
டிட்வா புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஓயாமல் கொட்டித் தீர்க்கும் மழையால் எழும்பூர், வடபழனி, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அரும்பாக்கம், பெரம்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, தரமணி என சென்னையின் பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
24
சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்
இந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுவித்துள்ளது. முன்னதாக சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கபப்ட்டு இருந்த நிலையில், இப்போது ஆரஞ்சு அலர்ட் ரெட் அலர்ட் ஆக மாறியுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
34
4 மாவட்டங்களில் மிக கனமழை
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இப்பொது ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக மழை கொட்டித்தீர்க்கும் அபாயம் உள்ளது. ஆகவே மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி இன்று ஆய்வு செய்தார். மழை பாதிப்புகள் குறித்தும், மழை பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உதயநிதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் வெளியேற்றி வருகின்றனர். சென்னையின் 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.