CSK தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்! இந்த வீக்னஸை மாற்றாவிட்டால் அவ்வளவுதான்!
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததற்கான 5 முக்கிய காரணங்கள், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததற்கான 5 முக்கிய காரணங்கள், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
IPL: 5 reasons for CSK's defeat against RCB: ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய சிஎஸ்கே 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்துமே மோசமாக இருந்தது. சிஎஸ்கேவின் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
சொதப்பலான பீல்டிங்
சிஎஸ்கே தோல்விக்கு முதல் முக்கிய காரணம் சொதப்பலான பீல்டிங் தான். ஆர்சிபி அணியின் ரஜத் படிதார் 30 பந்தில் 51 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். முன்னதாக அவர் கொடுத்த எளிய கேட்ச்களை கலீல் அகமது, தீபக் ஹூடா கோட்டை விட்டனர். இது தவிர சில பவுண்டரிகளையும் கோட்டை விட்டனர். இது அணிக்கு பெரும் பாதகமாக அமைந்து விட்டது.
ராகுல் திரிபாதிக்கு ஏன் ஓப்பனிங்?
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ராகுல் திரிபாதி ஒப்பனிங்கில் களமிறங்கி இரண்டு போட்டியிலும் சொதப்பி விட்டார். கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ஏற்கெனவே ஓப்பனிங்கில் களமிறங்கி நல்ல தொடக்கம் கொடுத்து வந்தார். ஆனால் இந்த தொடரில், நடுவரிசையில் ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடும் திரிபாதியை தேவையில்லாமல் ஒப்பனிங்கில் விளையாடச் செய்து தவறான முடிவை எடுத்துள்ளார் ருத்ராஜ் கெய்க்வாட். இந்த முடிவால் தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்து பின்னால் ஆடும் கெய்க்வாட்க்கே நெருக்கடி ஏற்படுகிறது.
ஐபிஎல் கோப்பையை 'இந்த' அணி வெல்லும்! ஐஐடி பாபா கணிப்பு! கலக்கத்தில் ரசிகர்கள்! ஏன்?
டெவோன் கான்வே எங்கே?
சிஎஸ்கேவுக்காக 15 போட்டிகளில் 672 ரன்களை அடித்துள்ள டெவோன் கான்வேயை 2 போட்டிகளிலும் களமிறக்காதது பெரும் தவறாகும். பாஸ்ட் பவுலர்கள் மட்டுமின்றி ஸ்பின்னர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் கான்வே, ஒப்பனிங்கில் களமிங்கி பல போட்டிகளில் சிஎஸ்கேவுக்கு வெற்றி பெற்று கொடுத்துள்ளார். இவருக்கு மாற்றாக விளையாடும் சாம் கரண் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகவே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாம் கரணுக்கு பதிலாக டெவோன் கான்வேயை விளையாட வைக்க வேண்டும்.
அதிரடி வீரர்கள் இல்லை
மற்ற அணிகளில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிக்கோலஸ் பூரன், மார்ஷ், ரஜத் படிதார் என 20 பந்துகளில் அரைசதம் அடிக்கும் வீரர்கள் இருக்கும் நிலையில் சிஎஸ்கேவில் அப்படியான வீரர்கள் இல்லாதது துரதிருஷ்டவசமாகும். ஏன் ஷிவம் துபே, தோனி இல்லையா? என நீங்கள் கேட்கலாம். துபேயிடம் அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடக்கூடிய திறமை இல்லை என்பதுதான் உண்மை. வயது காரணமாக தோனியால் 25 பந்துகளுக்கு மேல் களத்தில் ஆடுவது கடினமான விஷயமாகும். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரண், ஜடேஜா என மிதவேகத்தில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களையே சிஎஸ்கே அதிகம் வைத்துள்ளது பெரும் குறையாகும்.
வேகத்தில் மிரட்டும் பவுலர்கள் இல்லை
சேப்பாக்கம் மைதானத்தை மனதில் வைத்து தரமான ஸ்பின்னர்களை எடுத்த சிஎஸ்கே. வேகப்பந்து வீச்சில் கோட்டை விட்டு விட்டது. பதிரனாவை தவிர எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பாஸ்ட் பவுலர்கள் யாரும் இல்லை. குறிப்பாக பவர்பிளேயில் 140 கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டக்கூடிய பவுலர்கள் இல்லை. கலீல் அகமதுவால் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீச முடியுமா? என்பது கேள்விக்குறியே. சாம் கரணின் மிதவேக பவுலிங் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆகவே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வேகத்துக்கு உகந்த ஆடுகளத்தில் அதிவேக பவுலரை சிஎஸ்கே கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
மேற்கண்ட இந்த காரணங்கள் சிஎஸ்கேவின் பலவீனமாக உள்ளன. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தவறுகளை சிஎஸ்கே சரி செய்ய வேண்டும். இல்லாவிடில் இந்த ஆண்டு கோப்பையை மறந்து விட வேண்டியது தான்.
சிஎஸ்கேவுக்கு இந்த வீரர் தேவையே இல்லை! ருத்ராஜ் எடுத்த தவறான முடிவை விளாசும் ரசிகர்கள்!