
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் எம்.எஸ்.தோனி. உலகக் கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்து அணியை சிறப்பாக வழிநடத்திய பெருமையும் இவரையே சாரும். இந்திய அணியுடன் அவர் இருந்த காலத்தில் தோனி சாதித்தது ஏராளம். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒயிட் பால் கிரிக்கெட்டைப் போன்று சிறந்த கேப்டனாக அற்புதமான சாதனையை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை நம்பர் 1 தரவரிசைக்கு அழைத்துச் சென்றார் என்று யாரும் மறந்து விடக் கூடாது.
இந்திய அணி மட்டுமின்றி, இந்தியன் அணியின் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தோனி ஒரு கேப்டனாக விதிவிலக்கானவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை டிராபி வென்று கொடுத்தார். 2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நீக்கப்பட்டாலும் ஒரு விக்கெட் கீப்பராக தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2 சீசன்களாக தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி தான் ஒவ்வொரு மனதிலும் வந்து சென்றது. இல்லை இல்லை இன்னொரு சீசன் இன்னொரு சீசன் என்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வந்தார். இந்த நிலையில் தான் சிஎஸ்கே உடன் தோனி மீண்டும் வருவாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக தோனி ஓய்வு பெறுவதற்கான 7 விதமான காரணங்கள் உள்ளன. அது என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
அதற்கு முன்னதாக தோனி ரசிகர்களான நீங்கள் எங்களை யாரும் திட்டக் கூடாது. நானும் தோனி ரசிகர் தான். அவரது கேப்டன்ஸி, இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய விதம் என்று எல்லாமே பிடிக்கும். அதுமட்டுமின்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கூட தோனி வரலாம் என்று நினைக்கத் தோன்றும்.
சரி, ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக தோனி ஓய்வு பெறுவதற்கான 7 காரணங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க…
நாளுக்கு நாள் வயது ஏறுகிறது:
விளையாட்டு வீரர்கள் நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாட முடியாது என்பதை தோனி ரசிகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். தோனிக்கு பின்னால், வயது அவரை பிடித்துள்ளது. தற்போது 43 வயதான தோனி ஒரு வருடத்தில் ஒரு தொடரில் விளையாடுவதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது திறமையின் உச்சத்தில் இருந்த போது செய்ததை இப்போதும் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.
பேட் உடனான ஒருங்கிணைப்பு இல்லை: திறமையா? ரன்களா?
ஆரம்ப காலகட்டத்தில் விளையாடியதைப் போன்று சமீபத்திய ஆண்டுகளில் தோனி நிலைத்தன்மை இல்லாமல் இக்கிறார். ஆனால், தோனியின் அனுபவத்தின் காரணமாக ஒரு போட்டி மட்டுமின்றி எல்லா போட்டியிலும் ஜெயிக்க முடியும். ஐபிஎல் 2024ல் தோனி 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் எத்தனை ரன்கள் அடிக்கிறார் என்பது முக்கியமில்லை. மைதானத்திற்குள் கால் பதிக்கிறாரா என்பது தான் முக்கியம் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் ஏக்கம் இருக்கிறது.
ஐபிஎல் 2023ல் தோனி 104 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், அந்த சீசனில் சிஎஸ்கே டிராபி வென்றது.
சிஎஸ்கேயின் எதிர்காலம்:
சிஎஸ்கே அணியிலிருந்து தோனி போன்ற ஒருவர் ஓய்வு பெறுவதற்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்று அதன் பிறகு வழிகாட்டியாக செயல்படுவதற்கும் இது தான் சரியான நேரமாக இருக்கும். ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் எதிர்காலத்திற்கு புதிய மையத்தை உருவாக்க நினைக்கும்.
இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு:
தோனி ஒரு விக்கெட் கீப்பராக இருக்கும்பட்சத்தில் சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட முடியும். அல்லது அவர்கள் விளையாட முடியாமல் காத்திருக்கலாம். தோனி கேப்டனாக இருக்கும் பட்சத்தில் தான் ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த சீசனில் சிஎஸ்கே தோல்வி மேல் தோல்வி அடைந்து விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தோனி கேப்டனானார்.
ஆனால், 2024ல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றார். சிஎஸ்கேயின் எதிர்காலம் கருதி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றார். அதே போன்று அணியில் ஒரு விக்கெட் கீப்பராக இருக்கும் போதே மற்றொரு இளம் விக்கெட் கீப்பருக்கு தோனி வாய்ப்பு கொடுத்து அவருக்கு அனுபவத்தை உண்டாக்கிக் கொடுக்கலாம்.
காயத்துடன் பேட்டிங்:
உடல் தகுதிக்காக தோனி கடுமையாக பயிற்சி செய்தாலும், கடந்த 2 சீசன்களில் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். முழங்கால் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். எனினும், அவ்வவ்போது வலியால் அவதிப்பட்டு வருகிறார். 2023 ஆம் ஆண்டு முழங்கால் காயம் அவரை தொந்தரவு செய்த நிலையில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
2024 ஆம் ஆண்டு தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக தோனி 7ஆவது அல்லது 8ஆவது வரிசையில் வந்து பேட் செய்தார். 2025 சீசனுக்கு முன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதை தோனி கருத்தில் கொள்ள இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எம்.எஸ்.தோனி ஒரு பணக்காரர்:
ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோனி பெரிய பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளார். இன்னமும் காலம் தாழ்த்துவதன் மூலமாக மிகவும் மதிக்கப்படும், விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி தனது அந்தஸ்திற்கும், கௌரவத்திற்கும் நன்மைக்கு பதிலாக தீமையை செய்ய நேரிடும். ரசிகர்கள் தல என்று தொடர வேண்டுமென்றால், தோனி தனது முடிவு குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும்.
தோனி வாழ்க்கையின் பிற வழிகள்:
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றால் தனது வாழ்க்கையின் மற்ற வழிகளில் தோனி முழுமையாக கவனம் செலுத்தலாம். ஏற்கனவே பல வணிகங்கலில் தோனி முதலீடு செய்துள்ளார்.
தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் கொண்டுள்ளார். மேலும், இந்திய அணியின் வழிகாட்டியாக அல்லது ஆலோசகராக தொடர்ந்து பயணம் செய்யலாம். இவ்வளவு ஏன், வாய்ப்பு கிடைக்கும் போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கூட வரலாம்.