
இந்திய அணியின் அதிரடி வீரரான விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு ரூ.1912 கோடியாக உயர்ந்துள்ளது. சினிமா பிரபலங்களுக்கு கூட இந்த அளவிற்கு பிராண்ட் மதிப்பு கிடையாது. இவ்வளவு ஏன், இந்திய அணியின் முன்னாள் வீரர் கூல் கேப்டன் என்று அழைக்கப்பட்ட எம்.எஸ்.தோனியின் பிராண்ட் மதிப்பு கூட ரூ.766 கோடி ஆகும்.
வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படோஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை டிராபியை வென்றது. இந்த தொடரில் குரூப் சுற்று போட்டியில் இந்தியா விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று சுப்பர் 8 சுற்றுக்கு சென்றது.
இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடைசியாக 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. இதில், விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் பெர்ஃபார்மன்ஸால் இந்தியா நல்ல ஸ்கோரை எட்டி வெற்றி வாகை சூடியது. அதோடு 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை தட்டி தூக்கியது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி இடம் பெற்று விளையாடினார். இந்த தொடரில் இந்தியா 0-2 என்று ஒருநாள் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் க்ராலின் பிராண்ட் மதிப்பு அறிக்கை 2023ன் படி விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 29 சதவிகிதம் அதிகரித்து 227.9 மில்லியன் டாலராக (ரூ.1912 கோடி) உயர்ந்துள்ளது. இந்த அசுர வளர்ச்சி விராட் கோலியை பிரபலங்களின் உச்சியில் வைப்பது மட்டுமின்றி அவரது புகழ் மற்றும் செல்வாக்கையும் எடுத்துக் காட்டுகிறது.
இந்த அசுர வளர்ச்சியின் மூலமாக அதிக பிராண்ட் மதிப்புகளின் பட்டியலில் விராட் கோலி நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட்டில் நிலையான திறமை, சமூக ஊடகங்களில் அவரது இணைப்பு இரண்டும் விராட் கோலியை பிராண்டுகளின் மத்தியில் மதிப்பு மிக்கவராக உயர்த்தியுள்ளது.
கோலிக்கு பிறகு ரூ.1699 கோடியுடன் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் பிராண்ட் மதிப்பின் படி 2ஆவது இடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து கிங் காங் என்று அழைக்கப்படும் ஷாருக் கான் ரூ.1000 கோடி பிராண்ட் மதிப்பின் படி பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறார். அக்ஷய் குமார் ரூ.929 கோடி மதிப்பில் 4ஆவது இடத்திலும், ஆலியா பட் ரூ.845 கோடி மதிப்பில் 5ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
இவர்களது வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ரூ.766 கோடியுடன் அடுத்தடுத்த வரிசையில் இடம் பெற்றுள்ளார். என்னதான் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பை விட தோனிக்கு பிராண்ட் மதிப்பு பல கோடி ரூபாய் குறைவு தான்.
இதே போன்று தான், சச்சின் டெண்டுல்கர் ரூ.766 கோடி, ரோகித் சர்மா ரூ.344 கோடி மற்றும் நீரஜ் சோப்ரா ரூ.335 கோடி என்று பிராண்ட் மதிப்புகளின் படி பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா, மனு பாக்கர் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது விளம்பரத்திற்கான சம்பளம் பல கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.