
Vaibhav Suryavanshi Youngest Player in IPL 2025 : ஐபிஎல் 2025-ன் 36வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழக்கவே நிக்கோலஸ் பூரன் 11 ரன்களுக்கு நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
இதே போன்று ஆயுஷ் பதோனியும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்துக் கொடுத்தார். அவர், 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 130, 140 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் களமிறங்கிய அப்துல் சமாத் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதில், 4 சிக்சர்கள் அடங்கும். கடைசி ஓவரில் அவர் அடித்த அந்த 4 சிக்ஸர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இடியாக அமைந்துவிட்டது.
இளம் வயதில் ஐபிஎல் அறிமுகம்
இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. பின்னர், 181 ரன்களை இலக்காக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இம்பேக்ட் பிளேயராக 14 வயது நிரம்பிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்கினார்.
14 வயது 23 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட்:
இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். அவருக்கு வயது 14 ஆண்டுகள் 23 நாட்கள் ஆகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு விண்ணப்பித்திருந்த பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
12 வயது 284 நாட்களில் ரஞ்சிக் கோப்பை:
பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, ரஞ்சிக் கோப்பை 2023-24 தொடரில் 12 வயது 284 நாட்களில் விளையாடி சாதனை படைத்தார். ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலமாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார். யுவராஜ் 15 வயது 57 நாட்களிலும், சச்சின் 15 வயது 230 நாட்களிலும் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமானார்கள்.
இதுவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ரியான் பராக் 17 வயது 175 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். இப்போது அவரது இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் வைபவ் சூர்யவன்ஷி 14 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் போட்டியில் தனது முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி புதிய சாதனையும் படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட மொத்தமாக 34 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த வீரர்கள்:
ராப் குயினி (RR)
கெவோன் கூப்பர் (RR)
ஆண்ட்ரே ரஸ்ஸல் (KKR)
கார்லோஸ் பிராத்வைட் (டிடி)
அனிகேத் சவுத்ரி (RCB)
ஜாவோன் சியர்ல்ஸ் (KKR)
சித்தேஷ் லாட் (MI)
மகேஷ் தீக்ஷனா (CSK)
சமீர் ரிஸ்வி (CSK)
வைபவ் சூர்யவன்ஷி (RR)*
வைபவ் சூர்யவன்ஷி குறித்து அவரது தந்தை கூறியிருப்பதாவது:
ராஜஸ்தான் ராயல்ஸுடன் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் தனது மகனை எளிமையாக வைத்திருப்பதில் சஞ்சீவ் கவனம் செலுத்துகிறார். "அவர் கிரிக்கெட் மட்டும்தான் விளையாட விரும்புகிறார். வேறு எதுவும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு டோரமான் பிடிக்கும், இப்போது இல்லை," என்று சஞ்சீவ் கூறினார்.
பீகார் கிரிக்கெட் சங்கம் (BCA) வைபவ்வின் சாதனையைப் பாராட்டியுள்ளது. பிசிஏ தலைவர் ராகேஷ் திவாரி மிகுந்த பெருமிதம் தெரிவித்து, "வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதிலேயே அற்புதமான சாதனையைப் படைத்தது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது. பீகாரில் இருந்து ஐபிஎல் வரை அவரது பயணம் அவரது திறமை, கடின உழைப்பு மற்றும் உறுதியைப் பிரதிபலிக்கிறது.
பீகார் கிரிக்கெட் சங்கம் எப்போதும் இளம் திறமைகளை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. வைபவ்வின் வெற்றி எங்கள் மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவர் தொடர்ந்து பிரகாசிப்பார் என்றும் பீகார் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிப்பார் என்றும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். வைபவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் ஐபிஎல் அறிமுகமான வீரர்கள்
வைபவ் சூர்யவன்ஷி- 14 வயது, RR, IPL 2025
ப்ரயாஸ் ரே வர்மன்- 16 வயது, RCB, IPL 2025
முஜீப் உர் ரஹ்மான்- 17 வயது 11 நாட்கள், PBKS, IPL 2018
ரியான் பராக் - 17 வயது 175 நாட்கள், RR, IPL 2019
சர்ஃபராஸ் கான் - 17 வயது 177 நாட்கள், RCB, IPL 2015