இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடி, கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 244 ரன்களை அடித்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடி வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது.
முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் இந்திய அணியை 36 ரன்களுக்கு சுருட்டியதால், 2வது இன்னிங்ஸில் 90 ரன்கள் என்ற எளிய இலக்கை அசால்ட்டாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து, தொடக்க வீரராக அணியில் எடுக்கப்பட்ட பிரித்வி ஷா, முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார்; 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே படுமோசமாக சொதப்பினார்.
இந்நிலையில், இந்த போட்டியில் பிரித்வி ஷாவிற்கு பதிலாக ஷுப்மன் கில்லைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்றும், ஃபார்மில் இல்லாத பிரித்வி ஷாவை எடுத்தது தேர்வாளர்களின் தவறு என்றும் ஆஸி., முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு பேசிய டாம் மூடி, பிரித்வி ஷா தோற்கவில்லை; இந்திய அணி தேர்வாளர்கள் தான் தோற்றுவிட்டார்கள். பிரித்வி ஷா ஃபார்மில் இல்லாத நிலையில், அவரை அணியில் எடுத்திருக்கக்கூடாது. அவரது பேட்டிங் டெக்னிக்கிலும் சில பிரச்னைகள் உள்ளன. நல்ல பேட்டிங் டெக்னிக்கும், பொறுமையும் கொண்ட ஷுப்மன் கில்லைத்தான் தொடக்க வீரராக எடுத்திருக்க வேண்டும். பிரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு லாயக்கில்லை என்று நான் சொல்லவில்லை. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு பிரித்வி சரியாக ஆடாதது அவரது தவறல்ல. அவரை ஆடும் லெவனில் எடுத்ததே தவறு.