
இந்திய கலாச்சாரத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு விளையாட்டு எது என்றால் அது கிரிக்கெட் தான். இதில் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள் கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர். இவர்களது வழியில் கிரிக்கெட் உலகில் ஏராளமான சாதனைகளை படைத்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா.
ஹிட்மேன் ரோகித் சர்மா
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா தற்போது இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டிக்கு நிரந்தர கேப்டன் யார் என்று அறிவிக்கப்படாத போதிலும் கடைசியாக நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்தார்.
நாக்பூரில் பிறந்த ரோகித் சர்மா
1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் ரோகித் சர்மா. தந்தைக்கு போதுமான வருமானம் இல்லாத நிலையில் போரிவலியில் உள்ள அவருடைய தாத்தா மற்றும் மாமவின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரே ஒரு அறை மட்டுமே உள்ள தனது அப்பாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
ரோகித் சர்மா பயிற்சியாளர் தினேஷ் லாட்
தனது மாமாவின் உதவியுடன் 1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் அகாடமியில் ரோகித் சர்மா இணைந்தார். அங்கு தான் தினேஷ் லாட் பயிற்சியாளராக இருந்தார். அவர், சுவாமி விவேகானந்த சர்வதேச பள்ளியில் பயிற்சியாளராக இருந்த நிலையில் அந்த பள்ளியில் ரோகித் சர்மாவை சேரும்படி சொன்னார்.
ரோகித் சர்மா ஆஃப் ஸ்பின்னர்
மேலும், இந்தப் பள்ளியில் தான் கிரிக்கெட் வசதிகள் அதிகளவில் இருந்துள்ளன. பள்ளி கிரிக்கெட்டில் முதலில் ஆஃப் ஸ்பின்னராக தொடங்கியிருக்கிறார். ஆனால், அவர் பேட்டிங் செய்யும் திறமையைக் கண்ட தினேஷ் லாட் அவருக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்து 8 ஆவது வரிசையில் விளையாடி வந்த அவரை ஓபனிங் விளையாட வைத்துள்ளார்.
ரோகித் சர்மா ஸ்கூல் கிரிக்கெட் சதம்:
ரோகித் சர்மா Harris மற்றும் Giles Shield school cricket தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி அறிமுக வீரராக சதம் விளாசி அசத்தியுள்ளார். 2005ல் தியோதர் டிராபி தொடரில் விளையாடிய ரோகித், 2006ஆம் ஆண்டு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் பிடித்தார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார். முதல் முறையாக 2007 ஜூன் 23 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டின் மூலமாக ஒருநாள் தொடரில் அறிமுகமானார். இதையடுத்து, செப்டம்பர் 19 ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ரோகித் சர்மா கேப்டன்
2021 – 2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விராட் கோலியிடமிருந்த கேப்டன் பதவி ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுப்பதற்கு முன்னரே அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் அவர் கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பேற்றார்.
2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய 12 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. கடைசியாக 12ஆவது போட்டியான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. கங்குலி மற்றும் தோனிக்கு பிறகு சிறந்த கேப்டன்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
2024 டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை
இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய ரோகித் சர்மா இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.
டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு:
டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த ரோகித் சர்மா அந்த தொடருடன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 159 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 151 டி20 போட்டிகளில் பேட்டிங் செய்து 5 சதங்கள், 32 அரைசதங்கள் உள்பட 4231 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 205 சிக்சர்கள், 383 பவுண்டரிகள் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் 47 போட்டிகள் விளையாடியுள்ளார். ஒரு கேப்டனாக 50 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
3 முறை இரட்டை சதம்:
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் இவர் தான் சொந்தக்காரர்.