இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 374 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 308 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் சதமடித்தனர். வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும் அபாரமாக ஆடினர். ஆனால் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா(90) மற்றும் தவானை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டையே இந்திய அணி 28வது ஓவரில் தான் வீழ்த்தியது. அந்தளவிற்கு ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக ஆடினர். அதனால் இந்திய அணி திட்டமிட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், ஒதுக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
ஐசிசி 2.22 விதிப்படி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய வீரர்கள் அனைவருக்கும் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.