#AUSvsIND ஸ்டீவ் ஸ்மித் அபார சதம்..! அச்சுறுத்திய ஆஸி.,யை பொட்டளம் கட்டிய இந்தியா.. அசத்திய ஜடேஜா

First Published | Jan 8, 2021, 9:46 AM IST

3வது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஆஸி., அணியை, 338 ரன்களுக்கே சுருட்டியது இந்திய அணி.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்னிங்ஸின் 4வது ஓவரிலேயே வெறும் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் புகோவ்ஸ்கியும் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடினர். அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த புகோவ்ஸ்கி, 62 ரன்களுக்கு, இந்திய அணியில் அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
Tap to resize

அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். முதல் 2 போட்டிகளில் மொத்தமாகவே 10 ரன்கள் அடித்திருந்த ஸ்மித், இந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். லபுஷேன் வழக்கம்போல தெளிவாகவும் நேர்த்தியாகவும் ஆடி அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஸ்மித்தும் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி., அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்திருந்தது.
2ம் நாளான இன்றைய ஆட்டத்தை ஸ்மித்தும் லபுஷேனும் தொடர்ந்தனர். 91 ரன்கள் அடித்திருந்த லபுஷேன், ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து 100 ரன்கள் அடித்தனர். லபுஷேன் அவுட்டானதை தொடர்ந்து, மேத்யூ வேட்(13), க்றிஸ் க்ரீன்(0), கேப்டன் டிம் பெய்ன்(1), கம்மின்ஸ்(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 206 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்த ஆஸி., அணி, 278 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இவர்களில் லபுஷேன், வேட், கம்மின்ஸ் ஆகியோரை ஜடேஜாவும், க்ரீன் மற்றும் டிம் பெய்னை பும்ராவும் வீழ்த்தினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஸ்மித் சதமடித்தார். 8வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் ஓரளவிற்கு நன்றாக ஆடி 24 ரன்கள் அடித்த நிலையில், அந்த பார்ட்னர்ஷிப்பை சைனி உடைத்தார். ஸ்டார்க்கை சைனி வீழ்த்த, அதன்பின்னர் நேதன் லயன் மற்றும் ஸ்மித்தும் ஆட்டமிழக்க, 338 ரன்களுக்கு ஆஸி., அணி சுருண்டது. 131 ரன்கள் அடித்த ஸ்மித்தை ஜடேஜா ரன் அவுட்டாக்கினார். முதல் 55 ஓவரில் வெறும் 2 விக்கெட்டை இழந்திருந்த ஆஸி., அணி, அடுத்த 50 ஓவரில் எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.

Latest Videos

click me!