
ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒரு முறை டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து தலா 2 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி டிராபியை கைப்பற்றியது. இந்த நிலையில் தான் 9ஆவது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கேஎல் ராகுல், இஷான் கிஷான் இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாயதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்க் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.
9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நியூசிலாந்து, நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நேபாள், நெதர்லாந்து ஆகிய 20 அணிகள் இடம் பெற்றன.
முதல் கட்டமாக இந்த தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆவது அணியாக அணியாக பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் ஒவ்வொரு முறையும் இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், பிளேயிங் 11ல் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்படுவார். இது தான் இந்திய அணி பங்கேற்ற ஒவ்வொரு தொடரிலும் நடந்தது. மேலும், ரிஷப் பண்ட்டும் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில் ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 510 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 24 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடிய சாம்சன் ஒரு அரைசதம் உள்பட 374 ரன்கள் எடுத்துள்ளார்.
சாசனுடன் ஒப்பிடுகையில் ரிஷப் பண்ட் 2017 ஆம் ஆண்டு தான் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 865 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். மேலும், 66 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 987 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆதலால், இந்த முறையும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் தான் அமரும் நிலை உண்டாகும். எனினும், அவருக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.