Kanpur 2nd Test, IND vs BAN Test
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் சர்வதேச மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று வங்கதேசத்தை முழுமையாக ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்பதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உறுதியாக இருக்கிறார். ஆனால், இந்தப் போட்டி டிராவில் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே கான்பூரில் மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதோடு, முன்கூட்டியே போட்டியும் முடிக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் 35 ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட 40 முதல் 50 ஓவர்கள் குறைவு தான். பொதுவாக 80 முதல் 90 ஓவர்கள் வரையில் வீசப்படுவது வழக்கம். ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது.
Rohit Sharma-Mohammed Siraj
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னரே ரோகித் சர்மா ஒரு முடிவு எடுத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கேப்டனாக சரித்திரம் படைத்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தைரியமான முடிவை எடுத்த முதல் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இது கண்டிப்பாக போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கான்பூர் கிரீன் பார்க் மைதானம் முதலில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு தைரியமான முடிவை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆம், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். இதுவரையில் 60 ஆண்டுகளாக எந்த இந்திய கேப்டனும் இப்படியொரு முடிவையும் எடுத்ததாக சரித்திரம் இல்லை.
Rohit Sharma
கடைசியாக 1964 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது மன்சூர் அலி கான் பட்டோடி ஒரு இந்திய கேப்டன் இப்படி தேர்வு செய்தார். மேலும், 9 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்வது என்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான கான்பூர் 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் 11ல் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
India vs Bangladesh 2nd Test, Kanpur
அதாவது, கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டது. கூடுதல் பணிச்சுமை காரணமாக ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த போது, இந்தியா அதே பிளேயிங் 11 உடன் விளையாடும் என்று அறிவித்தார். இதன் மூலமாக 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரே லெவன் அணியை களமிறக்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதில், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ஆசியாவில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார்.
Rohit Sharma
ஆசியாவில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 420 விக்கெட்டுகள் கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்துள்ளார். இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் சுழல் சக்கரவர்த்தி 734 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 419 விக்கெட்டுகள் கைப்பற்றி 3ஆவது இடத்தில் இருக்கிறார்.
இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் 354 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடமும், இந்திய ஜாம்பவான் ஹர்பஜன் சிங் 300 விக்கெட்டுகளுடன் 5ஆவது இடமும் பிடித்துள்ளனர். டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது.