
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது ஐபிஎல் 2024 போட்டி முல்லன்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி 192 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 28 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 6500 ரன்களை நிறைவு செய்தார். மேலும், ஐபிஎல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 6500 ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி 244 போட்டிகளில் 7624 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 361 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6769 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டெல்லி கேபிடல்ஸ் வீரர் டேவிட் வார்னர் 182 போட்டிகளில் விளையாடி 6563 ரன்களும் எடுத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அதிரடி காட்டிய ஸ்கை 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 78 ரன்களில் நடையை கட்டினார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அவர் 10 ரன்களில் நடையை கட்டினார். டிம் டேவிட் 14 ரன்னிலும், ரொமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாம் கரண் 2 விக்கெட் எடுத்தார். கஜிசோ ரபாடா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இது அவரது 250ஆவது விக்கெட் ஆகும். அதுவும் இஷான் கிஷான் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடின இலக்க துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஜெரால்டு கோட்ஸி வீசினார்.
அந்த ஓவரில் முதல் பந்தில் சாம் கரண் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை வைடாக வீசினார். மேலும், அந்த பந்து பவுண்டரிக்கும் சென்றது. அடுத்த பந்தில் லெக் பைஸில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. பின்னர் தனது முதல் பந்தை எதிர்கொண்ட பிராப்சிம்ரன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 1 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சாம் கரன் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 1 ரன்னில் நடையை கட்டினார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் 2.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து போட்டியின் 6.5ஆவது ஓவரில் ஹர்ப்ரீத் சிங் 13 ரன்னில் ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் 9.2ஆவது ஓவரில் ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடியை தொடங்கினர். இதில், ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். 9.3ஆவது ஓவரில் களமிறங்கி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை நோக்கி சென்றது. கடைசி 4 ஓவருக்கு 28 ரன்கள் தேவையிருந்தது. ஆனால், 17.1 ஆவது ஓவரில் அஷுதோஷ் சர்மா ஆட்டமிழந்தார்.
அவர், 28 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதமாகும். கடைசி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு பஞ்சாப் தள்ளப்பட்டது. 19ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஹர்ப்ரீத் பிரார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கஜிஸோ ரபாடா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், முதல் பந்திலேயே ரன் அவுட் முறையில் வெளியேற பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.