சிஎஸ்கே – ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
Chennai Super Kings, IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 30ஆவது லீக் போட்டி தற்போது எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக தோனி கேப்டனாக செயல்பட்டு அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். எனினும், சிஎஸ்கே விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு
எஞ்சிய 8 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு பற்றி யோசிக்க முடியும் என்பதால், தற்போது நடைபெற்று வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்தே வெற்றியை பெற வேண்டும். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி பவுலிங் தேர்வு செய்தார். மேலும் அணியில் அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
அஸ்வின், கான்வே நீக்கம்:
அதன்படி ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேமி ஓவர்டன் மற்றும் ஷேக் ரஷீத் இருவரும் அணியில் இடம் பெற்றனர். இந்தப் போட்டியில் கடுமையான போராட்டதிற்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 6 ரன்களுக்கு கலில் அகமது பந்தில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
பூரன் 8 ரன்களுக்கு அவுட்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 8 ரன்களுக்கு நடையை கட்டினார். நிதானமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 30 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஆயுஷ் பதோனி இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 9.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ பண்ட்டின் அதிரடியால் ஓரளவு ரன்கள் குவித்தது.
ரிஷப் பண்ட் 63 ரன்கள்
ஆயுஷ் பதோனிக்கு கிடைத்த 3 வாய்ப்புகளுக்கு பிறகு அவர் 22 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த அப்துல் சமாத் 20 ரன்கள் எடுக்க பண்ட் 49 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் எடுத்தார். இந்த சீசன் முழுவதும் சொதப்பி வந்த ரிஷப் பண்ட் இந்த போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.
ஜடேஜா, பதிரனா 2 விக்கெட்டுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 167 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.