
ஐபிஎல் 2008 கிரிக்கெட் தொடர் முதல் முறையாக தொடங்கப்பட்ட போது, நடந்த முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 222/3 ரன்கள் குவித்தது. இதில், பிராண்டன் மெக்கல்லம் அதிரடியாக விளையாடி 158 ரன்கள் எடுத்தார். இதில், 13 சிக்சர் மற்றும் 10 பவுண்டரி அடங்கும். இதே போன்று 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் 222/6 ரன்களை கேகேஆர் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. இதுவரையில், விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.
இதில், டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்திலேயே தடுமாறிய சுனில் நரைனுக்கு யாஷ் தயாள் யார்க்கரில் காலை பதம் பார்த்துவிட்டார். அதன் பிறகு 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்கிரிஸ் ரகுவன்ஷி 3 ரன்களில் நடையை கட்டினார்.
போட்டியின் 4ஆவது ஓவரை லாக்கி பெர்குசன் வீசினார். இந்த ஓவரில் பிலிப் சால்ட் 6, 4, 4, 6, 4, 4 என்று மொத்தமாக 28 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக கேகேஆர் 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் 17 ரன்னிலும், ரிங்கு சிங் 24 ரன்னிலும் நடையை கட்டினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு பொறுப்பை உணர்ந்து விளையாடி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20 ஆவது அரைசதத்தை அடித்தார். அவர் 36 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன் தீப் சிங் கடைசியில் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக கேகேஆர் 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரை யாஷ் தயாள் சிறப்பாக வீசியதால், அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. ரமன் தீப் சிங் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 24 ரன்னும், ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 27 ரன்னும் எடுத்தனர்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் யாஷ் தயாள் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆனால், இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி 204 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மகிபால் லோம்ரார், கரண் சர்மா, லாக்கி ஃபெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், ராமன் தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷிக் ராணா.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 19 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 14 போட்டிகளில் ஆர்சிபி அணியும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.