நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வில் யங் மற்றும் டிம் செய்பெர்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் வில் யங் நிதானமாக தொடங்கினாலும், கடைசி பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த ஓவரில் டிம் செய்பெர்ட்டும் ஆகுய்ப் நபி பந்துவீச்சில் பவுண்டரியும் சிக்சரும் அடித்தார். அதே ஓவரில் அடுத்தடுத்து ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் செய்பெர்ட்டின் கேட்ச்சை தவறவிட்டனர். 5 ஓவர்களில் நியூசிலாந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 7வது ஓவரில் குர்னூர் பிரார் பந்துவீச்சில் டிம் செய்பெர்ட் சிக்சரும், இரண்டு பவுண்டரிகளும் அடித்து 14 ரன்களை குவித்தார்.
2வது ஒருநாள் போட்டியில் இவ்விரு தொடக்க வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்த நபி, இந்த போட்டியில் 8வது ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் செய்பெர்ட் பவுண்டரியும் சிக்சரும் அடிக்க, வில் யங் ஒரு பவுண்டரி விளாச 15 ரன்கள் கிடைத்தது. டிம் செய்பெர்ட் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்திருந்தது. செய்பெர்ட் (51*), யங் (16*) களத்தில் இருந்தனர். குர்னூர் பிரார் 12வது ஓவரில் டிம் செய்பெர்ட்டை 58 ரன்களில் வெளியேற்றி முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது நியூசிலாந்து 85/1 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாவதாக களமிறங்கிய நிக் கெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அக்சர் படேல் பந்துவீச்சில் இஷான் கிஷனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 14.2 ஓவர்களில் நியூசிலாந்து 96/2 ரன்கள் எடுத்திருந்தது. 15.4 ஓவர்களில் வில் யங் அடித்த பவுண்டரியுடன் நியூசிலாந்து 100 ரன்களை தொட்டது. வில் யங் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார். டீன் பாக்ஸ்கிராப்ட் 19.3 ஓவர்களில் ஆகுய்ப் நபி பந்துவீச்சில் குர்னூர் பிராரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 125/3 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடினார். 23வது ஓவரில் அக்சர் படேல் பந்துவீச்சில் வில் யங் பவுண்டரியும் சிக்சரும் அடித்தார். 23.1 ஓவர்களில் நியூசிலாந்து 150 ரன்களை எட்டியது.
25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 159/3 ரன்கள் எடுத்திருந்தது. 26வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் யங் மற்றும் ஆலன் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தனர். இருவரும் 38 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். வில் யங் அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் பந்துவீச்சுகளை வெளுத்து வாங்கினார். 28.4 ஓவர்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரை 200 ஆக உயர்த்தினார். குர்னூர் பந்துவீச்சில் ஆலன் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார். 31வது ஓவரில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆலன் (30 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 41 ரன்கள்) ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 215 ரன்களுக்கு நியூசிலாந்து 4வது விக்கெட்டை இழந்தது.
அடுத்த ஓவரில் வில் யங் 88 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் ஒருநாள் போட்டிகளில் தனது 5வது சதத்தையும், இந்தியாவுக்கு எதிரான முதல் சதத்தையும் பதிவு செய்தார். குல்தீப் பந்துவீச்சில் 12 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். நியூசிலாந்து 36.2 ஓவர்களில் 250 ரன்களை எட்டியது. நமன் திர் பந்துவீச்சில் மாற்று வீரர் குமார் குஷாக்ராவிடம் கேட்ச் கொடுத்து வில் யங் 125 ரன்களில் (108 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழந்தார். 37 ஓவர்களில் நியூசிலாந்து 256/5 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் குர்னூர் பிரார் மைக்கேல் பிரேஸ்வெல்லை (15 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். மிட்செல் சான்ட்னர் மற்றும் கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
43வது ஓவரில் நமன் பந்துவீச்சில் சான்ட்னர் 2 சிக்சர்கள் விளாசினார். எனினும், அர்ஷ்தீப் பந்துவீச்சில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து சான்ட்னர் (24 ரன்கள், 29 பந்துகள்) வெளியேறினார். 44.2 ஓவர்களில் நியூசிலாந்து 293/7 ரன்கள் எடுத்திருந்தது. 45.5 ஓவர்களில் நியூசிலாந்து 300 ரன்களை கடந்தது. ஆகுய்ப் நபி பந்துவீச்சில் கிறிஸ்டியன் கிளார்க் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 48 ஓவர்களில் நியூசிலாந்து 318/8 ரன்கள் எடுத்திருந்தது. மேட் ஹென்றி தனது விக்கெட்டை தியாகம் செய்து கைல் ஜேமிசனை ஸ்ட்ரைக்கில் விட்டார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 333 ரன்களை குவித்தது. கடைசி பந்தில் மேத்யூ பிஷர் ரன் அவுட் ஆனார். ஜேமிசன் (19*) ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் படேல் (2/39), ஆகுய்ப் நபி (2/59), குர்னூர் பிரார் (2/69) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் மற்றும் நமன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ருத்துராஜ் களமிறங்கினர். முதல் ஓவரை மேட் ஹென்ரி வீசினார். அவர் போட்ட முதல் பந்திலேயே ஃபின் ஆலன் கையில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் ரோகித் சர்மா. இதையடுத்து கோலி களமிறங்கினார். மேட் ஹென்ரி பந்தை நிதானமாக ஆடிய அவர் அடுத்த 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் வீசிய 5-வது பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்தியா ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ ஆகி அவுட் ஆனார்.
இப்படி முதல் ஓவரிலேயே 3 இமாலய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து. ஒரே மேட்சில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் டக் அவுட் ஆவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த 2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தம்புல்லாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரும் டக் அவுட் ஆகினர். அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ருத்துராஜும் 5 ரன்களுக்கு அவுட் ஆனதால் தற்போது இஷான் கிஷனும், அக்சர் பட்டேலும் களத்தில் உள்ளனர். இந்தியா 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.