
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ச் ஹைதராபாத் அணியில் அபிஷெக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் 50 ரன்களுக்கு மேல் கொடுத்தாலும் இக்கட்டான சூழலில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர், கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா நல்ல தொடக்கம் கொடுத்தார். எனினும், அவர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து முதல் ஓவரிலேயே ஜாக் பிரேசர் மெக்கர்க் களமிறங்கினார்.
டேவிட் வார்னர் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 1 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிந்தார். வார்னர் விக்கெட்டை எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்தார்.
இதையடுத்து ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். முதல் ஓவரில் 4 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் கொடுத்து பிரித்வி ஷா விக்கெட்டை எடுத்த நிலையில் போட்டியின் 3ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார்.
அந்த ஓவரில் பிரேசர் மெக்கர்க், 4, 4, 6, 4, 6, 6, என்று மொத்தமாக 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 2.5ஆவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அதன் பிறகு அனுபவமிக்க பவுலரான பேட் கம்மின்ஸ் ஓவரில் 4, 6 என்று பொளந்து கட்டினார்.
முதல் பவர்பிளேயில் டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த மெக்கர்க், 14 பந்தில் ஒரு ரன்னும், 15ஆவது பந்தில் சிக்ஸரும் அடிக்க இந்த சீசனில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
மேலும், அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்தார். இந்த சீசனில் அபிஷேக் சர்மா 16 பந்திலேயும், டிராவிஸ் ஹெட் 18 பந்திலேயும் அரைசதம் அடித்திருந்தனர். இதற்கு முன்னதாக சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், யூசுப் பதான் ஆகியோர் 15 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.
மெக்கர்க், 18 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் விளையாடிய 3 போட்டிகளில் இது 2ஆவது அரைசதம் ஆகும். அபிஷேக் போரெல்லும் 42 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணியின் ரன் ரேட் குறைந்தது.
டெல்லி கேபிடல்ஸ் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு இணைந்த ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பெரிதாக அடிக்கவில்லை. ஸ்டப்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லலித் யாதவ் 7, அக்ஷர் படேல் 6, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 0, குல்தீப் யாதவ் 0 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். நடராஜன் வீசிய 18.1 ஆவது பந்தில் படேல் ஆட்டமிழக்க, 3ஆவது பந்தில் நோர்ட்ஜே வெளியேறினார். 4ஆவது பந்தில் குல்தீப் யாதவ் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக நடராஜன் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசியில் ரிஷப் பண்ட் 44 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவருக்கும் இந்தப் போட்டி கைகொடுக்கவில்லை.
இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மாயங்க் மார்க்கண்டே, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் 5ல் வெற்றி 2ல் தோல்விகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.