
India vs England 1st T20 Cricket Match : இந்தியா வந்த இங்கிலாந்து முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டீம் இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் எடுத்தார். இந்த போட்டியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 68 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். மற்ற யாரும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்திய அணியின் பீல்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து 132 ரன்களுக்கு சுருண்டது. மேலும் ரிங்கு சிங்கின் கேட்ச் மற்றும் பீல்டிங், நிதிஷ் குமார் ரெட்டியின் பீல்டிங் மற்றும் கேட்ச் தான் இன்றைய போட்டியில் டர்னிங் பாய்ண்ட்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டீம் இந்தியா பேட்டிங் செய்தது. சஞ்சு சாம்சன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 0 ரன்னுக்கு நடையை கட்டினார். பின்னர், அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் அதிரடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மாவின் காரணமாக 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா வெற்றி இலக்கை எட்டியது. 20 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து இந்திய அணியின் அதிக ரன்கள் எடுத்தவரானார். திலக் வர்மா (16 பந்துகளில் 19*) மற்றும் ஹர்திக் பாண்டியா (4 பந்துகளில் 3*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பவர் பிளேயின் இரண்டாவது ஓவரில் கஸ் அட்கின்சனுக்கு எதிராக 22 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் அதிரடித் துவக்கம் கொடுத்தார். ஆனால் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த அபிஷேக்கை ஆதில் ரஷீத் அவுட்டாக்க முடியவில்லை. அதன் ஓவரில் ஆதில் ரஷீதை பவுண்டரிக்கு அனுப்பிய அபிஷேக் தொடர்ந்து 2 சிக்ஸர்களையும் அடித்தார். ஜேம்ஸ் ஓவர்டனை சிக்ஸருக்கு பறக்கவிட்டு 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரரின் 2ஆவது வேகமான அரைசதம் இதுவாகும். ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து 12 பந்துகளில் அரைசதம் அடித்த யுவராஜ் சிங் தான் இங்கிலாந்துக்கு எதிராக வேகமான அரைசதம் அடித்த இந்திய வீரர்.
பத்தாவது ஓவரில் இந்தியாவை 100 ரன்களைக் கடக்க வைத்த அபிஷேக், கஸ் அட்கின்சனின் 2ஆவது ஸ்பெல்லின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். வெற்றிக்கு அருகில் அபிஷேக் ஆட்டமிழந்தாலும் ஹர்திக் மற்றும் திலக் வர்மா இணைந்து இந்தியாவின் அபார வெற்றியை உறுதி செய்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்று கைப்பற்றியுள்ளது. 2ஆவது டி20 போட்டி வரும் 25ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.