
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர்.
இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், பென் ஸ்டோக்ஸ் பந்துகளை இந்திய அணி 24.1 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து பிரைடன் கார்ஸ் பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்பு முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்ட தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் லெக் சைடுக்கு வெளியே சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து டக் அவுட் ஆனார்.
ஜெய்ஸ்வால் அதிரடி சதம்
இதனால் இந்திய அணி 92/2 என தவித்த நிலையில், ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் அணியை கைகொடுத்து காப்பாறினார்கள். சுப்மன் கில் தனக்கே உரிய டிரேட் மார்க் புல் ஷாட்கள் மூலம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.
மறுபக்கம் ஜெய்ஸ்வாலும் துரிதமாக ரன்கள் சேகரித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய 23 வயதான ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது சதம் விளாசினார். 144 பந்துகளில் தனது சதத்தை எட்டிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 101 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.
இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக விளையாடும் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து மாஸ் காட்டியுள்ளார். ஜெய்ஸ்வால் அவுட் ஆனபோது இந்திய அணி 221/3 என்ற நிலையில் இருந்தது. மறுபக்கம் கேப்டன் சுப்மன் கில் அட்டகாசமாக விளையாடினார். ரிஸ்க் எடுக்காமல் கிளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளாக விளாசிய சுப்மன் கில் சூப்பர் சதம் விளாசினார். டெஸ்ட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அவர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
முதல் நாளில் இந்தியா அபாரம்
சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த துணை கேப்டன் ரிஷப் பண்ட்டும் தொடக்கம் முதலே அதிரடியில் வெளுத்துக் கட்டினார். அதிரடியாக 2 சிக்சர்களை பறக்க விட்ட ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார். கில்லும், பண்ட்டும் சேர்ந்து ஜோடியாக 138 ரன்கள் சேகரித்தனர்.
இங்கிலாந்து பவுலர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 359 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 16 பவுண்டரி, 1 சிக்சர்களுடன் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 102 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். வழக்கமாக இங்கிலாந்து பிட்ச்சில் முதல் நாளில் நன்றாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இருக்கும். ஆனால் நேற்று ஹெடிங்கில் வெயில் அடித்த நிலையில், பந்து எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை. இதேபோல் பவுன்சும் சுத்தமாக இல்லை. பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் துரிதமாக ரன்கள் சேகரித்தனர்.
இங்கிலாந்து பவுலர்கள் மோசம்
பிட்ச் பேட்டிங்குக்கு கைகொடுத்தாலும் இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தவிர மற்ற யாரும் சரியாக பந்து வீசவில்லை. அதுவும் முக்கியமான பாஸ்ட் பவுலர்கள் கிறிஸ் வோக்ஸ் 19 ஓவர்களில் 89 ரன்கள், ஜோஷ் டாங்கே 16 ஓவர்களில் 75 ரன்கள் வாரி வழங்கினார்களே தவிர ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகி விட்டது.
இந்திய அணி டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தவுடன் இங்கிலாந்து பவுலர்கள் சீக்கிரம் விக்கெட் வீழ்த்தலாம் என நினைத்தனர். ஆனால் அவர்களின் கனவை நமது பேட்ஸ்மேன்கள் சாம்பலாக்கி விட்டனர். குறிப்பாக கேப்டன் சுப்மன் கில்லின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. 2 விக்கெட் விழுந்த பிறகு அழுத்தமான நிலையில் களமிறங்கிய அவர் தொடக்கம் முதலே பாஸிட்டிவாக ஆடினார்.
விராட் கோலி சாதனை பட்டியலில் இணைந்தார் கில்
மேலும் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்த கேப்டன் என்ற இந்திய வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் எடுத்தார் விராட் கோலி அதற்கு முன் 1976 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக அறிமுக டெஸ்டில் சுனில் கவாஸ்கர் 116 ரன்கள் எடுத்தார்.
1951 ஆம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டனாக அறிமுக டெஸ்டில் சதம் அடித்த சாதனையைப் படைத்தார் முன்னாள் வீரர் விஜய் ஹசாரே. இவர் டெல்லியில் இங்கிலாந்துக்கு எதிராக 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.