Dream11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து விலகியதால், ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்திய அணி ஸ்பான்ஸர் இல்லாத ஜெர்சியுடன் களமிறங்கும். ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா 2025 காரணமாக Dream11 இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருந்த Dream11 நிறுவனம் விலகியுள்ள நிலையில், அடுத்த மாதம் தொடங்கும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வீரர்கள் ஸ்பான்ஸர் லோகோ இல்லாத ஜெர்சியுடன் களமிறங்குவார்கள் என கூறப்படுகிறது.
25
Dream11 விலகலுக்கு என்ன காரணம்?
கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற “ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா 2025”-இன் விளைவாக, பணம் சார்ந்த ஆன்லைன் கேமிங் போட்டிகளை தனது தளத்தில் நிறுத்துவதாக Dream11 அறிவித்தது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேபாஜித் சைக்கியா கூறுகையில், "புதிய சட்டத்தின் கீழ் Dream11 அல்லது அது போன்ற வேறு எந்த கேமிங் நிறுவனங்களுடனும் பிசிசிஐ தொடர்ந்து ஒப்பந்தம் வைத்துக்கொள்வது கடினம். எனவே, ஒரு தடை ஏற்பட்டுள்ளது. Dream11-உடனான ஒப்பந்தம் தொடரும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு மாற்று நடவடிக்கையை பற்றி விவாதித்து வருகிறோம்" என்றார்.
35
புதிய ஸ்பான்ஸரைத் தேடும் பிசிசிஐ
இந்த சூழ்நிலையில், பிசிசிஐ-இன் தற்காலிக தலைவரான ராஜீவ் சுக்லா தலைமையில் வியாழக்கிழமை ஒரு அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஸ்பான்ஸரைத் தேடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடங்க உள்ள நிலையில், அதற்குள் புதிய ஸ்பான்ஸர் ஒப்பந்தம் நிறைவேறுவது சாத்தியமில்லை என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
Dream11 நிறுவனம், கடந்த 2023 ஜூலை மாதம், கல்வி நிறுவனமான Byju's-க்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்ஸராக, மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 358 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தில் ஒரு சிறப்பு விதி இருந்தது. அதாவது, ஒருவேளை அரசின் புதிய சட்டத்தால் Dream11-இன் பிரதான வர்த்தகம் தடைசெய்யப்பட்டால், அவர்கள் பிசிசிஐ-க்கு எந்தவித அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாகவே Dream11 எந்த அபராதமும் இன்றி விலகியதாக கூறப்படுகிறது.
55
உலகக் கோப்பை வரை ஸ்பான்ஸர் கிடைக்குமா?
பிசிசிஐ அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஒரு புதிய ஸ்பான்ஸரைத் தேடி வருகிறது. ஆனால், புதிய சட்டத்தின் காரணமாக, பெரிய நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுவது தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் ஸ்பான்ஸர் இல்லாத ஜெர்சியுடன் களமிறங்குவார்கள் என கூறப்படுகிறது.