
IND vs NZ Pune 2nd Test: நியூசிலாந்தின் சுழல் சக்கரவர்த்தி மிட்செல் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு சுருண்டது. புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்டின் 2வது நாளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் சரிந்தது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 259 ரன்களை துரத்திய இந்தியா, வெள்ளிக்கிழமை (இன்று) மதிய உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா (11) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (2) ஆகியோர் களத்தில் இருந்தனர். மிட்செல் சான்ட்னர் நான்கு விக்கெட்டுகளையும், க்ளென் பிலிப்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உணவு இடைவேளைக்கு பிறகு ஜடேஜா கூடுதலாக 17 ரன்கள் எடுத்து 38 ரன்களுக்கு சான்ட்னர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலமாக சான்ட்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அடுத்து வந்த ஆகாஷ் தீப் ஒரு சிக்ஸர் அடித்து சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக பும்ராவும் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழக்கவே இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து156 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் மிட்செல் சான்ட்னர் 19.3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 103 ரன்கள் பின் தங்கியுள்ளது. ரோகித் சர்மா (0), விராட் கோலி (1) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். இரண்டாவது நாளில் இந்தியாவின் முதல் விக்கெட்டாக கில், சான்ட்னரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் கோலி களத்திற்கு வந்தார். ஒன்பது பந்துகளை மட்டுமே சந்தித்த 35 வயதான கோலி, சான்ட்னரின் பந்துவீச்சில் போல்டானார்.
அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோலி, தேவையற்ற ஷாட்டை முயற்சித்து, குறைந்த ஃபுல் டாஸில் அவுட்டானார். தன்னம்பிக்கையுடன் தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (30) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் க்ளென் பிலிப்ஸின் பந்துவீச்சில் டேரில் மிட்செல்லால் கேட்ச் செய்யப்பட்டார்.
தொடரில் நல்ல ஃபார்மில் இருந்த ரிஷப் பந்த் (18), பிலிப்ஸின் பந்துவீச்சில் போல்டானார். கடந்த போட்டியில் சதம் அடித்த சர்ஃபராஸ் கான் (11), சான்ட்னரின் பந்துவீச்சில் மிட்-ஆன் மீது பந்தை அடிக்க முயற்சி செய்து அவுட்டானார். ரவிச்சந்திரன் அஷ்வின் ஐந்து பந்துகளை மட்டுமே சந்தித்து, சான்ட்னரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். நேற்று ரோகித் சர்மா (0) டிம் சவுதியின் பந்துவீச்சில் போல்டானார்.
முன்னதாக, நியூசிலாந்து 3 விக்கெட்டுகளுக்கு 197 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 76 ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, கிவிகள் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் ஏ இரண்டு விக்கெட்டுகளையும், அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தற்போது 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சவாலான இலக்கை வெற்றிக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த போட்டியிலும் நியூசிலாந்து ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே ஏசியாநெட் நியூஸ் தளத்தில் புனே மைதானத்தில் டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுக்கும் அணியே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் முதல் இன்னிங்ஸ் விளையாடும் அணி அதிக ரன்களையும், 2ஆவது இன்னிங்ஸ் விளையாடும் அணி குறைவான ரன்களையும் எடுக்கும் என்று பதிவிட்டிருந்தது. அதன்படியே தான் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் நடந்துள்ளது.