
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் மிகவும் முக்கியமான டி20 போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் மட்டுமே ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் இந்திய அணியானது தோல்வியை தழுவினால் மூட்டைமுடிச்செல்லாம் கட்டிக் கொண்டு நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்.
இதற்கு காரணம் மகளிர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறி 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரைப் பொறுத்த வரையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 லீக் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். ஆனால், முதல் போட்டியிலேயே தோற்றுவிட்டது. இன்று இந்தியா தனது 2 ஆவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் 7ஆவது லீக் போட்டியில் மட்டுமே தோற்றால் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் அணியுடன் இணைந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், நியூசி, ஆஸி, பாக், ஆகிய அணிகள் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இலங்கை விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மகளிர் அணி மட்டுமே 6 முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறை டிராபியை வென்றுள்ளன. நியூசிலாந்து 2 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 3 முறையும், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் தலா ஒரு முறையும் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறிவிட்டன. ஆனால், இந்த முறை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கொடுக்கும் நம்பிக்கை:
பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டு வருவதே ஹர்மன்ப்ரீத் கவுர் & கோவின் இலக்கு. இந்தத் தொடரில் அவர்கள் பிரபல அணிகளில் ஒன்றாகக் களமிறங்கியுள்ளனர். முதல் போட்டியில் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும், இன்று பிற்பகலில் நடைபெறும் போட்டியில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய முகாம் நம்புகிறது. இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சாதனை என்ன?
மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடியுள்ளது இந்திய அணி. அதில் 13 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்த வடிவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய போட்டியில் இந்த சாதனையை மேம்படுத்துவதே இந்தியாவின் இலக்கு. ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் & கோ. பிரபல அணியாகக் களமிறங்குவார்கள்.
கடைசியாக இந்தியா-பாகிஸ்தான் மகளிர் அணிகள் டி20 போட்டியில் மோதியது இந்த ஆண்டு ஆசியக் கோப்பையில். அந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் தீப்தி, ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இன்றைய போட்டியிலும் அதே போன்ற செயல்திறனை அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.
வெற்றியை நோக்கி இந்தியா மகளிர் அணி:
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறினர். பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமானால் அதே தவறை மீண்டும் செய்ய கூடாது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டும். இந்தப் போட்டியில் தோற்றால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
தற்போதைய மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணியால் சிறப்பாகத் தொடங்க முடியவில்லை, இருந்தாலும், பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டு வர ஹர்மன்ப்ரீத் கவுர் அண்ட் கோ தயாராகிவிட்டனர்.