Asia Cup 2025: ஆசியக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை முற்றிலுமாக ஓரங்கட்டினார்கள். அதாவது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் யாரும் கைகுலுக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
24
ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார்
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய வீரர்கள் மற்றும் போட்டி நடுவர் பைக்ராஃப்ட்டுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் தெரிவித்து இருந்தது. 'பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை சூர்யகுமார் யாதவுடன் கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் பைக்ராஃப்ட் கூறியுள்ளார். இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாரில் கூறியிருந்தது.
விளையாட்டில் அரசியல் கூடாது
ஆகவே ஆசியக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் இருந்து போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை நீக்க வேண்டும். இல்லாவிடில் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி விடுவோம் என்று பாகிஸ்தான் ஐசிசியிடம் பூச்சாண்டி காட்டியது. ''விளையாட்டில் அரசியலை இழுப்பது விளையாட்டின் உணர்விற்கு எதிரானது. எதிர்காலத்தில் இதுபோல் நடக்காது என்று நம்புவோம்'' என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி கூறியிருந்தார்.
34
பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி
இந்நிலையில், ஆசியக் கோப்பையில் இருந்து போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது. பிசிபி இயக்குனர் உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் சிலர், இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது இரு கேப்டன்களும் கைகுலுக்க மாட்டார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியா டுடே உள்ளிட்ட பத்திரிகை நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் மீது நடவடிக்கை
இதற்கிடையே ஆசிய கோப்பையில் இந்திய அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் சர்வதேச கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநர் உஸ்மான் வஹ்லாவை இடைநீக்கம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைகுலுக்கல் சர்ச்சையில் 'சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.