ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, தேவையில்லாத வீரர்களை ரிலீஸ் செய்துள்ளனர்.
அந்தவகையில் கேகேஆர் அணி, ஐந்து வீரர்களை ரிலீஸ் செய்தது. அதில், குல்தீப் யாதவ் இல்லை. குல்தீப் யாதவை தக்கவைத்துள்ளது. இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் பிரைம் ஸ்பின்னராக இருக்கும் குல்தீப் யாதவுக்கு, ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த அணியில் மாற்று ஸ்பின்னராகத்தான் உள்ளார். வருண் சக்கரவர்த்திதான் கடந்த சீசனில் பிரைம் ஸ்பின்னராக ஆடினார்.
2019 ஐபிஎல்லில் பாதி சீசனுக்கு மேல் எந்த போட்டியிலும் ஆடவைக்கப்படாத குல்தீப், கடந்த சீசனில் வெறும் ஐந்து போட்டிகளில் தான் ஆடினார். அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பும் கொடுக்காமல், அவரை ரிலீஸும் செய்யாமல் கேகேஆர் அணி வைத்திருப்பது சரியல்ல என்று கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கம்பீர், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பே கொடுக்காமல், அவரை அணியில் தக்கவைத்தது எனக்கு சர்ப்ரைஸாக உள்ளது. எந்த அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமோ அந்த அணிக்கு குல்தீப் செல்வதை பார்க்க நான் விரும்பினேன். இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு, ஐபிஎல்லில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அது அவரது கெரியரையே பாதிக்க வாய்ப்புள்ளது.
அவரை தக்கவைத்தால், ஆடவைக்க வேண்டும். குல்தீப் யாதவை கேகேஆர் ஆடவைக்கவில்லை என்றால், அவராகவே சென்று, தனக்கு வாய்ப்பு கொடுக்கும் அணிக்கு மாற விரும்புவதை தெரிவிக்க வேண்டும். குல்தீப் யாதவ் ஏலத்திற்கு வந்தால், நிறைய அணிகள் அவரை எடுக்க முன்வரும் என்று கம்பீர் தெரிவித்தார்.