
கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகளை கடந்த பிறகு 1983 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், டீம் இந்தியாவின் மறக்க முடியாத முதல் உலகக் கோப்பை வெற்றியில் ரத்தன் டாடா முக்கிய பங்கு வகித்தார்.
தொழில் சக்கரவர்த்தி ரத்தன் டாடா தனது 86ஆவது வயதில் நேற்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். நடுத்தர மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ரத்தன் டாடா தனது தன்னலமற்ற சேவையின் மூலமாக தொழில்துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
அந்த துறைகளில் விளையாட்டு துறையும் ஒன்று. அதாவது, கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழும் இந்திய கிரிக்கெட்டில் ரத்தன் டாடா முக்கிய பங்கு வகித்துள்ளார். முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிரிக்கெட் இந்தியாவில் 1932 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
டீம் இந்தியாவின் மறக்க முடியாத முதல் உலகக் கோப்பை வெற்றியில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. டாடா நிறுவனங்களின் உதவியுடன் கிரிக்கெட்டில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம் பெற்று இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களில் மொஹிந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோர் முக்கியமானவர்களாக கருதப்பட்டனர்.
1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹீரோக்களுக்கு டாடா செய்த உதவி:
1983 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு மொஹிந்தர் அமர்நாத் டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியாவுக்காகவும், சந்தீப் பாட்டீல் டாடா ஆயில் மில்களுக்காகவும், ரவி சாஸ்திரி டாடா ஸ்டீலுக்காகவும் விளையாடினர். மொஹிந்தர், ரவி சாஸ்திரி மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகிய வீரர்கள் டாடாவின் உள்நாட்டு அணிகளுடன் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினர். அப்போது ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அப்போது டாடா நிறுவனம் கிரிக்கெட்டை இந்தியாவில் அதிகளவில் பிரபலமடையச் செய்தது.
இதையும் படியுங்கள்: ரஃபேல் நடால் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!!
டாடாவின் உதவியால் வளர்ந்த கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?
மொஹிந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோருடன் ஃபரூக் இன்ஜினியர் (டாடா மோட்டார்ஸ்), ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியன் ஏர்லைன்ஸ்), சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (ஏர் இந்தியா), கிரண் மோர் (டிஎஸ்சி), ருசி சுர்தி (ஐஎச்சிஎல்), விவிவிஎஸ் லக்ஷ்மன் (இந்தியன் ஏர்லைன்ஸ்), யுவராஜ் சிங் (இந்தியன் ஏர்லைன்ஸ்), ஹர்பஜன் சிங் (இந்தியன் ஏர்லைன்ஸ்), சுரேஷ் ரெய்னா (ஏர் இந்தியா), ராபின் உத்தப்பா (ஏர் இந்தியா), முகமது கைஃப் (இந்தியன் ஏர்லைன்ஸ்), நிகில் சோப்ரா (இந்தியன் ஏர்லைன்ஸ்), இர்பான் பதான் (ஏர் இந்தியா), ஆர்.பி. சிங் (டாடா குழுமம்) ஆகியோர் டாடாவிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் இணைந்து கிரிக்கெட்டில் முத்திரை பதித்துள்ளனர்.
இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்: பாயும் புலியை பதம் பார்த்த இந்திய சிங்கம் நிதிஷ் குமார் ரெட்டி 2ஆவது போட்டியில் அரைசதம் அடித்து சாதனை!
ரத்தன் டாடாவின் மறைவிற்கு கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டிருந்தார். அதில், அவரது வாழ்விலும் சரி, மறைவிலும் சரி ரத்தன் டாடா நாட்டையே நகர்த்திவிட்டார். அவருடன் நேரத்தை செலவிடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. ஆனாலும் அவரை சந்திக்காத மில்லியன் கணக்கானவர்கள் இன்று நான் உணரும் அதே துயரத்தை உணர்கிறார்கள். ஏனென்றால் அந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
விலங்குகள் மீதான அவரது அன்பிலிருந்து பரோபகாரம் வரை, தங்களைக் கவனித்துக் கொள்ளக் கூட வழி இல்லாதவர்களை நாம் கவனித்துக் கொண்டால் மட்டும் தான் யாராக இருந்தாலும் உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அமைதியாக இருங்கள் டாடா. நீங்கள் கட்டியெழுப்பிய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் ஏற்றுக்கொண்ட மதிப்புகள் மூலம் உங்கள் மரபு தொடர்ந்து வாழும் என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.