IPL: எல்லை மீறும் 'நோட்புக்' கொண்டாட்டம்! அபிஷேக் சர்மா-திக்வேஷ் சண்டை! என்ன நடந்தது?

Published : May 20, 2025, 08:14 AM IST

ஐபிஎல்லில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் சிங் ரதிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கும் இடையே களத்தில் கடும் மோதல் உருவானது

PREV
14
Digvesh Singh Rathi and Abhishek Sharma Clash

ஐபிஎல்லில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்கள் குவித்தது. பின்பு ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த போட்டியில் லக்னோ இளம் வீரர் திக்வேஷ் சிங் ரதிக்கும், அபிஷேக் சர்மாவுக்கும் இடையே மோதல் உருவானது.

24
திக்வேஷ் சிங் ரதி நோட்புக் கொண்டாட்டம்

அதாவது லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு ஆக்ரோஷமாக கொண்டாட்டம் செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அபிஷேக் சர்மா திக்வேஷின் பந்தில் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்றார். ஆனால் ஆஃப் சைடில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் ஆனார்.அப்போது திக்வேஷ் சிங் ரதி தனது வழக்கமான நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அபிஷேக் சர்மா திக்வேஷ் சிங் சண்டை

அவர் மிகவும் ஆக்ரோஷமாக அபிஷேக் சர்மாவை மைதானத்தை விட்டு வெளியேறச் சொல்லி சைகை காட்டினார். இது அபிஷேக் சர்மாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் திக்வேஷ் சிங் ரதியிடம் சண்டையிட்டார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்கள் மற்றும் மைதான நடுவர்கள் தலையிட்டு, இரு வீரர்களையும் பிரித்து நிலைமையைத் தணித்தனர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

34
தொடர் சர்ச்சையில் திக்வேஷ் சிங்

நடப்பு ஐபிஎல் சீசனில் மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதில் 21 வயதான திக்வேஷ் சிங் ரதி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெர்சிக் வில்லியம்ஸிடமிருந்து ஈர்க்கப்பட்ட 'நோட்புக்' கொண்டாட்டங்களை ஐபிஎல் தொடரில் திக்வேஷ் சிங் ரதி பின்பற்றி வருகிறார். 

இந்த கொண்டாட்டம் சர்ச்சையில் முடிவதால் அவருக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஒரு குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டது.

44
பிசிசிஐ கடிவாளம் போடுமா?

திக்வேஷ் சிங் ரதியின் நோட்புக் கொண்டாட்டம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் அவருக்கு பிசிசிஐ கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஒருபக்கம் சர்ச்சை இருந்தாலும் மறுபக்கம் திக்வேஷ் சிங் ரதி நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

 லக்னோ அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் அவர் தான். 12 போட்டிகளில் 28.07 சராசரியிலும் 8.18 என்ற எகானமி விகிதத்திலும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories