மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு!

First Published Jan 30, 2023, 12:19 PM IST

மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அண்டர்19 மகளிர் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த அணிக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை தொடர்

தென் ஆப்பிரிக்காவில் மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நேற்று நடந்த இறுதிப் போட்டியுடன் முடிவடைந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் முன்னேறின.

மகளிர் அண்டர் 19 டி20

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், முதலில் நடந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து

2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. இதில், இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
 

இந்திய அண்டர்19 மகளிர் அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அண்டர்19 மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா (கேப்டன்), ஷ்வேதா செராவத், சௌமியா திவாரி, கொங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ரிஷிதா பாசு, டைட்டஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ்.

இங்கிலாந்து

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாகவே அந்த அணியில் ரயானா 19 ரன்கள் மட்டுமே அடித்தார். அலெக்ஸா, சோஃபியா ஆகிய இருவரும் தலா 11 ரன்களும், மற்றொரு வீராங்கனை 10 ரன்னும் அடித்தனர். மற்ற அனைவருமே இரட்டை இலக்கத்தை கூட எட்டாமல் ஆட்டமிழக்க, 17.1 ஓவரில் வெறும் 68 ரன்களுக்கு இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணி ஆல் அவுட்டானது.

அண்டர்19 மகளிர் டி20 உலக கோப்பை

69 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இந்திய அண்டர் 19 மகளிர் அணி 14வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக நடத்தப்பட்ட அண்டர்19 மகளிர் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பார்ஷவி சோப்ரா, டைட்டஸ் சாது மற்றும் அர்ச்சனா தேவி ஆகிய மூவருமே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 

ரூ. 5 கோடி பரிசு

இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் ஆண்கள் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் முறையாக தொடங்கப்பட்ட மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணிக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது- உலகக்கோப்பையை வென்ற மகளிர் அண்டர் 19 அணிக்கு வாழ்த்துக்கள். இளம் கிரிக்கெட் வீராங்கனைகளால் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு கு ரூ.5 கோடியை பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ராகுல் டிராவிட், பிரித்வி ஷா வாழ்த்து


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் உலகக் கொப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி ஆண்கள் அண்டர் 19 டி20 அணிக்கு கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த பிரித்வி ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!