ஐபிஎல் 14வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்கிறது. ஏலத்திற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளனர்.
அணி காம்பினேஷனை கருத்தில் கொண்டு, அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் அனைத்து அணிகளும் உள்ள நிலையில், கேகேஆர் அணி அதிரடி பேட்டிங் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரசலுக்கு பேக்கப் வீரரை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரசல் காயத்தால் ஆடவில்லை என்றால், அவரது இடத்தை பூர்த்தி செய்யும் வீரர் கேகேஆர் அணியில் இல்லை. கடந்த சீசனில் அவர் காயத்தால் அவதிப்பட்டதுடன், ஃபார்மில் இல்லாமலும் தவித்துவந்தார். அது கேகேஆர் அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது.
இந்நிலையில், கேகேஆர் அணி ஆண்ட்ரே ரசலுக்கு மாற்று வீரராக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரை எடுக்க நினைத்தால், ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் அல்லது மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை எடுக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கேமரூன் க்ரீன் மற்றும் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் ஆகிய இருவருமே பவுலிங்கும் வீசக்கூடிய நல்ல பேட்டிங் ஆல்ரவுண்டர்கள்.