
திருப்பதி ஏழுமலையான கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் கூறியிருந்தார். முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தன்மையே கெட்டுவிட்டதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதை தொடர்ந்து அந்த நெய்யை பரிசோதனை செய்தத்தில் அதில் மாடு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலப்படம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பக்தர்கள், கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி லட்டு விவாகரம் அரசியல் அரங்கிலும் சர்ச்சையாக மாறி உள்ளது. ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த திங்கள் கிழமை பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோயிலின் புனிதத்தன்மை மீட்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தான் அறிவித்தது. இந்த சூழலில் ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யான், திருப்பதியில் நடந்துள்ள இந்த பாவச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார்.
திருப்பதி பிரசாத லட்டில் கலப்படம் நடைபெறுவது இதுமுதன்முறையல்ல. அரசர் காலத்திலேயே லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்துள்ளது, அதற்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்கள் திருப்பதி கோயில் கல்வெட்டில் இருப்பதாக கல்வெட்டு துறை இயக்குனர் முனிரத்தினம் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் “ அரசர் காலத்திலேயே திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எப்படி பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு செல்ல வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் திருப்பதி கோயில் கல்வெட்டில் இருக்கின்றன.
அரசர் காலத்தில் நெய்யை சரிவர பராமரிக்காமல் இருந்த கோயில் ஊழியர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை விவரங்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன.
கி.பி 8-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட 1,150 கல்வெட்டுகளில் 600க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழிலும், மற்றவை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ளன.
பல்லவர்கள், சோழர்கள், பாண்டவர்கள், யாதவராயர்கள், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி கால கல்வெட்டுகளில் இந்த விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் கோயில் பிரசாதங்கள், ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் குறித்தும் தகவல்கள் உள்ளன.
அதன்படி, ஏழுமலையானுக்கு திருப்போனகம் (வெண் பொங்கல், பாயாசம், பருப்பு அவியல், சுகியம், சர்க்கரை பொங்கல், பாலேட்டு குழம்பு, புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்களை எப்படி செய்ய வேண்டும், எந்தெந்த விசேஷ நாட்களில் அவற்றை பெருமாளுக்கு படைக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள மடப்பள்ளியை போட்டு என்று அழைக்கின்றனார். அதனை எப்படி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்? பிரசாதம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் போன்ற விவரங்களும் இந்த கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. பிரசாதம் தயாரிப்பதிலோ அல்லது கோயில் நிர்வாகத்திலோ தவறு செய்யும் ஊழியர்கள் அல்லது அர்ச்சகர்களுக்கும் தண்டனை மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கோயில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் நெய்யின் தரத்தை சரிபார்க்காதது, கோயில் விளக்கில் நெய் மற்றும் கற்பூரத்தை சரிவர பயன்படுத்தாது ஆகியவை குறித்து வந்த புகார்கள் அடிப்படையில் அதனை விசாரிக்க திருச்சானூரில் ஒரு கூட்டம் நடந்தது.
இந்த விசாரணையின் போது தவறு செய்தவர்களிடம் இருந்து பொற்காசுகளும் வெள்ளிக்காசுகளும் அபராதமாக வசூலிக்கப்பட்டதும், அவர்கள் உடனடியாக கோயில் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. மேலும் குற்றம் செய்தவர்களின் வம்சவாளியினருக்கும் கோயில் பணி செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது” என்று முனிரத்தினர்ம் கூறியுள்ளார்.