
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலைக்கு செல்லும் வழியில் இருக்கும் மற்ற ஐயப்பன் கோயில்களுக்கும் செல்ல பக்தர்கள் தவறுவதில்லை.
தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, புனலூர், பத்தனம்திட்டா வழியாக சபரிமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். தென்காசிக்கு அருகில் கேரள மாநிலத்தில் உள்ள 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயில்கள் குறித்து பார்க்கலாம்.
தென்காசியில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் கேரளாவின் அச்சன்கோவில் என்னும் இடத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் வனராஜனாக அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பன், கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமணமாகாதவர்கள் அச்சன்கோவில் தர்மசாஸ்தாவை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே பக்தர்கள் இந்த ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியின் உள்ளே இருக்கும் அச்சன்கோவில் ஐயப்பனை காண வனங்கள் வழியாக செல்வது புத்துணர்ச்சியை கொடுக்கும்.
நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
எப்படி செல்வது? தென்காசியில் இருந்து செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக மலைப்பாதையில் பயணித்து இந்த கோயிலை அடையலாம். செங்கோட்டையில் தினமும் காலை, மாலை வேளையில் கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தென்காசியில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவில் குளத்துப்புழா என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் சுவாமி ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கின்றனர்.
குழந்தை வரம் வேண்டி ஐயப்பனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதிகம். கோயிலின் முன்பகுதியில் கல்லடா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் உற்சாகமாக குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் ஐயப்பனை வழிபடலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
எப்படி செல்வது? தென்காசியில் இருந்து செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை வழியாக குளத்துப்புழா செல்லலாம். தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகள் குளத்துப்புழா வழியாகச் செல்லும்.
தென்காசியில் இருந்து 22 கிமீ தொலைவில் சபரிமலை செல்லும் பிரதான சாலையில் ஆரியங்காவு பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இந்த கோயிலில் மட்டும் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தமிழக எல்லையில் அமைந்துள்ளதால் இந்த கோயிலின் பூஜைகள் தமிழக முறைப்படி நடைபெறுகிறது. சபரிமலை செல்லும் பிரதான சாலையில் உள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆரியங்காவு ஐயப்பனை தரிசிக்க தவறுவதில்லை.
நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
எப்படி செல்வது? தென்காசியில் இருந்து செங்கோட்டை, புளியறை வழியாக ஆரியங்காவு சென்றடையலாம். தென்காசியில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்துகள் ஆரியங்காவு வழியாக கேரளாவின் மற்ற இடங்களுக்கு செல்கின்றன. கோயிலுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தம் உள்ளது.
சென்னையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16101), மதுரை, குருவாரூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16327) ஆகிய ரயில்கள் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.