சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி அதாவது இன்று ஏற்படுவதால், திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எனவே, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடையானது காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 8-ம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தையொட்டி கோயில் நடை காலை முதல் மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் மூடப்படும். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதும் நிலையில், சுவாமியை ரூ.300 சிறப்பு தரிசன கட்டணம் மூலம் (SED) தரிசனம் ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பொதுவாக சூரிய கிரகணம் என்பது வானில் நடக்கக் கூடிய ஒரு அற்புதமான நிகழ்வாக கருதப்படுகிறது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் போது ஏற்படுவதே சூரிய கிரகணம் எனப்படுகிறது. பொதுவாக சூரிய கிரகணத்தின் போது பூமியில் ஏற்படுகின்ற நிழல் எதிர்மறையான ஆற்றல்களை கொண்டதாக கருதப்படுகின்றது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இந்திய நேரப்படி, அக்டோபர் 25 ஆம் தேதி அன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42 வரை சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மாலை 5.14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இது பகுதி சூரிய கிரகணமாகப் பார்க்கப்படும்.