Temples for child boon in tamilnadu: குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் பல சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஐந்து திருக்கோயில்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தற்போதைய காலத்தில் திருமணமான தம்பதிகள் பலருக்கும் குழந்தை பாக்கியம் என்பது கனவாக மாறிவிட்டது. பலரும் குழந்தை வரம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள சில கோயில்களுக்கு குழந்தை வரம் அருளும் சக்தி உண்டு என்று நம்பப்படுகிறது. அதில் முக்கியமான ஐந்து கோயில்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
26
திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை அம்மன் திருக்கோயில்.
இந்தக் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அருள்மிகு முல்லை வனநாதர். அம்பிகை அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகை (கரு காத்த நாயகி). கர்ப்பம் தரிப்பதில் தடை உள்ளவர்கள் மற்றும் கருத்தரித்த பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி இந்த கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனுக்கு நெய் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, அங்கு பூஜிக்கப்பட்ட நெய்யை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து உண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
36
கருவளர்சேரி அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில்
கும்பகோணம் வலங்கைமான் மருதநல்லூர் அருகில் கருவளர்ச்சேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில். இங்கு மூலவராக அருள்மிகு அகத்தீஸ்வரரும், அம்பிகையாக அருள்மிகு அகிலாண்டேஸ்வரி (கருவளர் நாயகி) காட்சி தருகின்றனர். கர்ப்பத்தில் உள்ள சிசு ஆரோக்கியமாக வளரவும், கருத்தரிப்பதில் உள்ள தடைகள் நீங்கவும் இந்த கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். குழந்தைப் பேறு வேண்டுபவர்கள் இங்கு படி பூஜை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சன்னதியில் பூஜை செய்யப்பட்ட மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து தொடர்ந்து பூசி வர குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தண்கா என்கிற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் கோயில். இது விளக்கொளி பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் சந்தான சீனிவாசர் என்கிற பெயரில் பெருமாள் குழந்தை கண்ணனாக அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த குழந்தை கண்ணனை வேண்டி துளசி மாலை சாற்றி வழிபட்டு, ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் நிச்சயம் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த கோயிலில் பிரகாரத்தில் உள்ள வேப்பமரத்தில் எலுமிச்சை பழம் அல்லது தொட்டில் கட்டுவதும் பிரதான வழிபாடாக உள்ளது.
56
திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயில்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி என்கிற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில். இங்கு தாயாராக ஸ்ரீ மரகதவல்லி வீற்றிருக்கிறார். தாயார் மரகதவல்லிக்கு இங்கு விசேஷமான வழிபாடு உள்ளது. குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகள் தாயாரை வணங்கி பிரசாதமாக வழங்கப்படும் திருமண் மற்றும் துளசியை உண்டுவர மகப்பேறு உண்டாகும் என்று நம்பப்படுகிறது. தாயாரின் சன்னதியில் உள்ள படியில் நெய் விளக்கேற்றி வழிபடுவதும், தொட்டில் கட்டி வழிபடுவதும் இங்குள்ள வழக்கமாகும்.
66
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் திருக்கோயில்
திருச்சி மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை. உச்சிப் பிள்ளையார் கோயில. அமைந்துள்ள மலையின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோயில் இதுவாகும். இங்கு மூலவராக தாயுமானவர் (சிவன்), அம்பிகை மட்டுவார்குழலி ஆகியோர் காட்சி தருகின்றனர். இத்தலத்து இறைவன், பக்தை ஒருவரின் பிரசவ காலத்தில் தாயின் இடத்திலிருந்து உதவி செய்ததால் தாயுமானவர் என்று பெயர் பெற்றார். சுகப்பிரசவம் வேண்டுபவர்கள், கருத்தரிப்பதில் உள்ள தடைகள் நீங்க வேண்டுபவர்கள் இங்கு உள்ள தாயுமானவரை மனம் உருகி வேண்டிக்கொண்டால் அவர் கருணையுடன் அருள் புரிவார் என்பது ஐதீகம்.