தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளார். நேற்று முதல் நிகழ்வாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது சிவபெருமானின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது. இங்கு உள்ள மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று நானும் இந்த புனித தலத்தில் உள்ளதால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். காரணம் இது சிவனின் இடம். இந்த புனித தலத்திற்கு நான் வருவது இதுதான் முதல் முறை.
சிவபெருமானின் அழைப்பு தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது என்றார். இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான். திருவண்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் இல்லை. அசைவம் சாப்பிடுவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். இதனை தடுக்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். இதனையடுத்து, சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உணவு பரிமாறினார்.
இரண்டாவது நாளான இன்று காலை 7 மணியளவில் அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 7.40 மணியளவில் ஆளுநர் ரவி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கிரிவலத்தை தொடங்கினார். கால்களில் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் கிரிவலப் பாதை முழுவதும் நின்றிருந்த சாதுக்களை வணங்கியவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே கிரிவலம் வந்தார். கிரிவலப் பாதையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் செங்கம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றார்.