இறைவனுக்கு உகந்த மலர்கள் கூறித்து புராணங்களும், புஷ்பவிதி நூலும் தெரிவிக்கின்றன. பூஜை செய்யும் மலர்கள் தோஷமின்றி அதாவது பூச்சிக்கள் தீண்டாத, எச்சமிடாத விடியலில் பறித்த மலர்களால் தான் வழிபாடு செய்யவேண்டும். இதையே நன்மலர் என ஞானசம்பந்தர் கூறுகிறார். இங்கு சிவனுக்கு உகந்த மலர்களை குறித்து காணலாம்.
செண்பகம், புன்னை, பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை ஆகியவை சிவபெருமானுக்கு செய்யும் பூஜைக்கு ஏற்றவை. இதில் நந்தியாவர்தம்,அரளி போன்ற மலர்களை வீட்டிலே வளர்க்கலாம். இவற்றை சிவனுக்கு பூஜை செய்தால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொண்டு வழிபாடு நடத்துங்கள். ஊமத்தை ,மந்தாரை, மகிழம்பூ ஆகியவற்றையும் சிவன் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பூக்கள் தான் சிவனுக்கு சாற்ற வேண்டிய முக்கியமான பூக்கள்.
புன்னை மரம் கடற்கரைப் பகுதியில் காணப்படும். மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கபாலீஸ்வரருக்கு புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக உள்ளது. பசும் இலைகள், வெள்ளை வண்ண பூக்களும் உடைய இந்த மரம், கோடைக்காலத்தில் அதிகம் பூக்கும். திருப்புனவாயில், திருப்புகலூர், திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லூர், திருவேட்டக்குடி ஆகிய சிவத்தலங்களில் புன்னை தான் தலமரமாக இருக்கிறது. 'நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை' என தேவாரம் திருவேட்டக்குடியில் வீற்றிருக்கும் சிவபிரானை குறிப்பிடுகிறது.
"வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை" என தேவாரம் சிவனைக் குறிப்பிடுகிறது. வெள்ளெருக்கு மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூத்துக் குலுங்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ ஸ்தலத்தில் இம்மரம் விருக்ஷமாக விளங்குகிறது. இங்கு விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் தான் பூஜை செய்யப்படும். திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலமரமாக விளங்குகிறது.
நந்தியாவட்டை என கூறப்படும் இந்த பூக்கள் திருவெண்ணியூர் திருக்கோயிலில் தலமரமாக விளங்குகிறது. சிவ பூஜைக்குரிய சிறந்த மலராதலால் இது எல்லாத் திருக்கோயில், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படும். அரளி (அலரி) பூக்கள் ஆண்டுதோறும் பூப்பதால் மாலைகளில், அர்ச்சனையில் தவறாது இடம்பெறும். திருக்கரவீரம், திருக்கள்ளில் தலமரமாக அலரி உள்ளது. கரவீரம் என்பது அலரியின் மற்றொரு பெயராகும். இந்த பூக்களை கொண்டு சிவனை வழிபட்டால் நன்மைகள் நூறாக கிடைக்கும்.
தாமரையில் மகாலக்ஷ்மி குடியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. திருவீழிமிழலையில் விஷ்ணு சிவ பூஜை செய்யும்போது ஆயிரம் தாமரை மலர்களால் வழிபட்டு சக்கரம் பெற்றதாக புராணம் கூறுகிறது. சிவனின் மனம் குளிரச் செய்ய பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை பண்ணிணாராம் விஷ்ணு.
சிவனுக்கு விருப்பமான மலர் செண்பகம். இந்த மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கும். இன்றும் செண்பகவல்லி என அம்பாளுக்கும், சென்பகாரன்யேஸ்வரர் என சுவாமிக்கும் பெயர் வழங்குவதை காணமுடியும். பாதிரி மரம் நீண்ட பூக்களோடு உயரமாக வளரக் கூடியதாகும். இதுவும் சிவபெருமானுக்கு உகந்த மலர். திருப்பாதிரிப்புலியூர் இதனை தலவிருட்சமாக கொண்டுள்ளது.