மகாசிவராத்திரி விரதம் இன்று (பிப்.18) கடைபிடிக்கப்படும். இந்நாள் சிவபெருமான் பார்வதியை மணம் முடித்த நாள் என புராணங்கள் கூறுகின்றன. இன்றைய தினம் விரதமிருந்து வழிபட்டால் சிவபெருமான் பல காரியங்களை வாய்க்கச் செய்வார். நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் இன்று செய்யும் சிவ வழிபாட்டில் சில பொருட்களை உபயோகம் செய்யக் கூடாது. அவை என்னென்ன? அதற்கு என்ன காரணம் என்பது தெரிந்து கவனமாக செயல்படுங்கள்.
ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுக்கும் இடையே யார் பெரியவர்? என கேள்வி வர இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் தன் அடிமுடியை பார்க்க முடியாத வகையில் ஜோதியாக உருவெடுத்தார். இப்போது இருவரில் யாருக்கு என் அடியோ, முடியோ கண்ணுக்கு புலப்படுகிறதோ அவர் தான் பெரியவர் என்றாராம். பிரம்மன் அன்னப் பறவையாகவும், விஷ்ணு, வராக உருவெடுத்தும் அடியைக் காண விரைந்தனர். ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அவர்களால் சிவனின் அடியோ, முடியோ காணவேமுடியவில்லை. அப்போது சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவிடம் பிரம்மன், தான் சிவனின் முடியை கண்டதாக பொய்சாட்சி கூற கேட்டிருக்கிறார். அதற்கு இசைந்து தாழம்பூவும் பொய் கூற, சிவனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. இதனால் பிரம்மனுக்கு பூவுலகில் வழிபாடு நடக்காது எனவும், தன் பூஜையில் தாழம்பூவே இருக்கக் கூடாது எனவும் சாபம் கொடுத்தாராம். மறந்தும் நீங்கள் பூஜையில் தாழம்பூ வைக்கவேண்டாம்.
விஷ்ணுவின் பக்தை துளசி. இவளுக்கு பிருந்தா என்றொரு பெயர். முற்பிறவியில் ராட்சச குடும்பத்தில் பிறந்தவள். ஜலந்தரா எனும் அரக்கன் அவளது மணவாளன். ஜலந்தர் தன் இணையாளின் பக்தியாலும், விஷ்ணுவின் கவசத்தாலும் அழியா பாக்கியம் பெற்றவர். அவர் தேவர்களுடன் போருக்கு செல்லும்போது, பிருந்தா பூஜையில் அமர்ந்து கணவரின் வெற்றிக்காக பூஜிப்பாள். அவளின் விரத பலனால் ஜலந்தருக்கு தோல்வியே கிடைக்கவில்லை. அவனை தோற்கடிக்க சிவன் வந்து களமிறங்கினார். தோற்கடிக்கவும் செய்தார். கணவனை இழந்த பிருந்தா கோபத்தில் பொங்கினார். சிவனை எதிர்க்க துளசியாக பிறப்பெடுத்தாள். அதனால் தான் சிவனுக்கு துளசி வைத்து பூஜை செய்யக் கூடாது என சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி அன்று உங்கள் கையால் சிவனுக்கு எந்தெந்த பூக்களை வைத்து வழிபட்டால் வாழ்க்கை வளமாகும் தெரியுமா?
சிவலிங்கத்தின் மீது மஞ்சளை பூசிவிடக் கூடாது. பெண்களின் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் அதனை சிவனின் லிங்கத்தில் பூசி விடக் கூடாது என கூறப்படுகிறது.
இந்திய பெண்களுக்கு குங்குமம் முக்கியமானது. கணவரின் நீண்ட ஆயுளுக்காக அதனை பெண்கள் நெற்றியில் இடுவர். ஈசன் அழிக்கும் கடவுள், ஆதலால் குங்குமத்தை கொண்டு வழிபடுவது புனிதமற்றதாகக் கூறப்படுகிறது.