இந்த வருடம் 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் 25ல், சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 8 ம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. 15 நாட்களில் இரண்டு கிரகணம் வருவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பூமியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இயற்கை பேரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஆனால், இதுவரை அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று, மீண்டும் ஒருமுறை வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி 2023ஆம் ஆண்டு தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். சந்திர கிரகணம் என்பது அறிவியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். அதன்படி, சந்திர கிரகணம், நவம்பர் 8 ம் தேதி இந்திய நேரப்படி 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 5.38 மணிக்கு தான் உதயமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. சந்திரகிரகணத்தை பொதுமக்கள் காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.