Tharpanam: தர்ப்பணம் கொடுப்பது மூடநம்பிக்கையா? தமிழ் மரபில் இல்லையா? தமிழறிஞர்கள் கூறுவது என்ன?

Published : Jul 25, 2025, 04:41 PM ISTUpdated : Jul 25, 2025, 04:42 PM IST

தர்ப்பணம் என்பது இந்து மதத்தில் மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆசீர்வாதத்தை பெறவும் செய்யப்படும் ஒரு சடங்காகும். இது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ் அறிஞர்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.

PREV
16
தர்ப்பணம் எதற்காக கொடுக்கப்படுகிறது?

அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சடங்கை தமிழர்கள் தொன்று தொட்டு செய்து வருகின்றனர். தமிழர்கள் வழிபாட்டில் முன்னோர்களை வழிபடும் வழக்கம் சங்க காலம் முதலே இருந்து வருகிறது. பல சங்க இலக்கியங்களில் முன்னோர்களை வழிபட்டும், அவர்களுக்கு படையலிடும் முறை பற்றியும், அவற்றை போற்றி பேசும் வழக்கம் ஆகியவை காணப்படுகின்றன. மறைந்த முன்னோர்களுக்கு உணவு மற்றும் நீரை இறைத்து தர்ப்பணம் கொடுப்பது என்பது இந்து சமயத்தில் நீண்ட காலமாகவே இருந்து வரும் நடைமுறையாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கிய சடங்காக கருதப்படுகிறது. எள்ளும், தண்ணீரும் கொண்டு செய்யப்படும் இந்த சடங்கானது முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு பசியையும், தாகத்தையும் போக்கி அவர்களுக்கு அமைதியை தரும் என நம்பப்படுகிறது.

26
தர்ப்பணம் குறித்த ஆன்மீக அறிஞர்களின் கருத்து

ஆன்மீக அறிஞர்களின் கருத்துக்களின் படி தர்ப்பணம் என்பது சடங்கு மட்டுமல்ல, அது முன்னோர்களுக்கான நன்றி உணர்வையும், அடுத்த தலைமுறைக்கான தொடர்பையும் வெளிப்படுத்தும் வழி என கூறப்படுகிறது. இந்த சடங்கானது குடும்பத்தில் சுபிக்‌ஷத்தை ஏற்படுத்துவதோடு மன அமைதியை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. காஞ்சி மகா பெரியவர் போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். காகங்களுக்கு உணவளிப்பது கூட முன்னோர்களை நினைவு கூறும் வடிவமே என்று மகா பெரியவர் கூறியுள்ளார். சில தமிழ் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் இந்த சடங்குகளை மூடநம்பிக்கையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகள் பலனளிக்காது என்றும், வாழும் மனிதர்களுக்கு உதவுவதே உண்மையான தர்மம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

36
தமிழ் மரபில் அமாவாசை வழிபாடு உண்டா?

பகுத்தறிவாளர்களின் கூற்றுப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடல் மண்ணோடு மண்ணாக மாறிவிடுகிறது. அவரது ஆத்மா வேறு நிலைக்கு சென்று விடுகிறது. எனவே இத்தகைய சடங்குகள் பயனற்றவை என்பது சிலரின் வாதங்களாக இருந்து வருகிறது. ஆனால் சிலரோ பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது அவர்கள் எந்த உலகில் இருந்தாலும் அவர்களை போய்ச் சென்று சேரும் என்றும், அவர்களைப் பசியால் வாட விட்டால் அந்த பாவம் நம் தலைமுறைகளையும் வந்து சேரும் என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் அமாவாசை பற்றி தமிழ் மரபு கூறுவது என்ன? அமாவாசை தமிழர்களின் மரபில் வேரூன்றிய ஒன்றா? என்பதை தமிழ்ப் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான இளமுருகன் விளக்கியுள்ளார் அவர் கூறியதாவது, அமாவாசை வழிபாடு தமிழருக்குரிய கோட்பாடு அல்ல. வளர்பிறை, தேய்பிறை, முழு நிலவு ஆகியவை வான நூல் புலமையோடு சம்பந்தப்பட்டது.

46
வேத நாகரீத்திற்கு பின் தோன்றிய வழக்கமே

வானியல் பற்றி சிந்திக்கப்படாத காலங்களிலேயே தமிழர்கள் இறந்தவர்களை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அதுதான் நடுகல் மரபு. தமிழில் ஆரியம் கலக்கின்ற வரை இது ஒரு வேத விழாவாக நடைபெறவில்லை. முந்தைய காலத்தில் மறைந்து போன வீரர்களை நடுகல் வைத்து வழிபடுவது, மூதாதையர்களை வழிபடுவது என்பதே வழக்கமாக இருந்தது. வேத நாகரிகம் சங்க காலத்திற்கு பிற்பகுதியில் தமிழகத்தில் நுழைகிறது. சங்ககால அரசர்களும் வேத விற்பனர்களை வேள்வி இயற்றுவதற்கு ஆதரிக்கத் தொடங்குகின்றனர். இதன் பின்னர் மூதாதையருக்கு ஏற்கனவே படையல் செய்து வழிபட்டு வந்த தமிழ் மக்களிடம், குறிப்பிட்ட நாளை வரையறுத்து, அதில் வடமொழி ஸ்லோகங்களை சொல்லி, பித்ரு லோகத்தில் இருக்கக்கூடிய மூதாதையர்களுக்கு இந்த பொருட்களை வைத்து பூஜை செய்தால் அவர்களுக்கு போய் சேரும் என்ற ஒரு கற்பித்தத்தை கற்பிக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மூதாதையர்கள் மேல் வைத்த நம்பிக்கையை இந்த வேத வழி நாகரீகத்தினர் சுரண்டலாக மாற்றுகின்றனர்.

56
தமிழ் மரபில் இதுதான் வழக்கம்

தமிழ் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு செய்யும் மரியாதை என்பது இறந்த தேதியில் செய்வது, அவ்வப்போதே செய்வது, ஒட்டுமொத்தமாக செய்வது, மாட்டுப் பொங்கல் அன்று கால்நடையை வணங்கி விட்டு பிறகு இல்லத்தில் வந்து சுவற்றில் மெழுகி, பொட்டு வைத்து இறந்தவர்கள் அணிந்த ஆடைகள் அல்லது இறந்தவர்களுக்கு பிடித்தமான ஆடைகளை வாங்கி வந்து படைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகள் பலகாரங்கள் ஆகியவற்றை படையல் இட்டு வழிபாடு செய்வது என்ற முறைகள் தான் தமிழர் மரபில் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் பல கிராமங்களில் நம்மால் பார்க்க முடியும். நெடுங்காலத்திற்கு முன்பு இறந்தவர்களுக்கும் ஆடி அமாவாசையில் செய்தால் சென்று சேரும் என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டதால் பலரும் ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.

66
தனிப்பட்ட ஒருவரின் விருப்பம்

நம் குடும்பத்தில் தேவைகள் இருக்கிறது. கஷ்டங்கள் இருப்பதால், இதை செய்து பார்க்கலாமே என்ற எதிர்ப்பார்ப்பில் பலரும் இந்த வழக்கத்தை செய்யத் தொடங்கினர் என தமிழ்ப் பேராசிரியரும், வராலற்று ஆய்வாளருமான இளமுருகன் தெரிவித்தார். தர்ப்பணம் என்பது ஒவ்வொரு தனி நபரின் நம்பிக்கை மற்றும் புரிதலைப் பொறுத்தது. பலரும் இதை ஆழ்ந்த ஆன்மீக சடங்காகவும், முன்னோர்களுடன் உள்ள பிணைப்பை வலுப்படுத்தும் முறையாகவும் பார்க்கிறார்கள். மற்றவர்கள் இதை அறிவியல் பூர்வமற்ற மூடநம்பிக்கையாக கருதுகிறார்கள். பெற்றோர்கள் இருக்கும்பொழுது அவர்களுக்கு உணவளித்து அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளாமல் இறந்த பின் அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைப்பதால் என்ன பயன் என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். தமிழர் மரபில் இது ஒரு நீண்ட காலம் பழக்கமாக இருந்தது என்பதும், பலராலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

(மேற்கூறப்பட்ட தகவல்கள் தமிழ் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான இளமுருகன் கூறிய கருத்துக்கள் மட்டுமே. இதற்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories